ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் கடிதங்கள்

4 ஆனி 2024 செவ்வாய் 09:12 | பார்வைகள் : 4271
இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் விடுமுறை வாழ்த்து அட்டைகள் வருகிற 27-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளன.
1981-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரையிலான 14 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அட்டைகளும் பல உணர்வுபூர்வமான கடிதங்களும் இந்த ஏலத்திற்கு வருகிறது.
இளவரசர் சார்லசை மணந்த பிறகு அவர்கள் எழுதிக் கொண்ட கடிதங்களும் இதில் அடங்கும்.
பெவர்லி ஹில்சில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தால் இந்த ஏலம் நடத்தப்பட உள்ளது.இதில் 1982-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி எழுதப்பட்ட ஒரு கடிதம் இளவரசர் சார்லசுடன் அவரது தேனிலவு பயணத்தின் மகிழ்ச்சியை குறிப்பிடுகிறது.
இதே போல ஒரு கடிதத்தில், தாய்மை உணர்வில் மகிழ்ச்சி அடைந்த டயானா, இளவரசர் வில்லியம் பிறந்த பிறகு தன்னை மிகவும் பெருமைப்படக்கூடிய மற்றும் அதிர்ஷ்டசாலியான தாய் என்று விவரிக்கிறார். மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கான தனது ஆர்வத்தையும் அதில் வெளிப்படுத்தி உள்ளார்.
1983-ம் ஆண்டு ஹெலிகாப்டரில் இருந்து கையசைத்து விடைபெற்ற விதத்தை அவர் விவரிக்கும் 2 பக்க கடிதங்கள் டயானாவின் இயல்பான தன்மையை வெளிப்படுத்துகிறது.
டயானாவின் கையால் எழுதப்பட்ட செய்திகள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் மற்றும் மைல்கற்களை இந்த கடிதங்கள் வெளிப்படுத்தும் என்பதால் இவை ஏலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.