Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கல்வி கற்கும் இளைஞர்களும் இணையவழி சிறுவர் துஷ்பிரயோகமும்

கல்வி கற்கும் இளைஞர்களும் இணையவழி சிறுவர் துஷ்பிரயோகமும்

17 ஆனி 2024 திங்கள் 12:54 | பார்வைகள் : 5440


இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இணையம் பிள்ளைகளின் கற்றல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்கு சுயகற்றல் மற்றும் சமூக மேம்பாடு வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை பெறுவதற்கான வழிகளை திறந்துவிடுகின்றன. 

2020இல் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தால் வெளியிட்ட ஆய்வில், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இணைய பயனாளிகளில் 47 வீதமானவர்கள் என குறிப்பிடப்படுகிறது. இத்தகைய வாய்ப்புக்களானது குழந்தைகளுக்கு சாதகங்களை ஏற்படுத்துவது போன்று பாதகங்களையும் விளைவிக்கின்றன.

இவற்றில் மிக முக்கிய பிரச்சினையாக ஒன்லைன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தினைக் குறிப்பிடலாம். இதற்கு பிரதான காரணம் சிறுவர்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்துள்ள இணையப் பாவனை மற்றும் கைத்தொலைபேசி பாவனையை சுட்டிக்காட்டலாம். சிறுவர்களில் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களுக்கும் பல்வேறு செயலிகளுக்கும் அடிமையாகி உள்ளதோடு அதனூடாக உடல், உள, சமூக ரீதியான பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.

கடந்த வருடங்களில் ஒன்லைன் சிறுவர் துஷ்பிரயோகங்களின் நிலைகளை பற்றி ஆராயுமிடத்து, 2019இல் இன்டர்நெட் வாட்ச் அறக்கட்டளை ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு வலைப்பக்கத்தை மதிப்பிட்டது. ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் அந்த வலைப்பக்கம் ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் காட்டியது. 2020ஆம் ஆண்டில் IWFஇன் அறிக்கையின்படி 153,369 குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான அறிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளதோடு 68,000 குழந்தைகளின் சுய உருவாக்கப்பட்ட படங்களையும் உறுதிப்படுத்தின.

2023ஆம் ஆண்டு தேசிய சிறுவர் அதிகார சபையின் சட்ட அமுலாக்க பணிப்பாளர் சஞ்சீவனி அபயகோன் மாதத்துக்கு 600க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக கூறுகிறார். அதிகபடியாக 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 1026 சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் குறிப்பிட்டார். 

மேலும் ஜனவரி மாதத்தில் 779 சம்பவங்களும், பெப்ரவரி மாதத்தில் 709 சம்பவங்களும் பதியப்பட்டுள்ளன என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) குறிப்பிட்டுள்ளது. 

ஜூலை மாதம் கம்பஹாவில் ஒரு ஆண், பெண் பிள்ளையை போல இணையத்தில் நடித்து 14 வயது சிறுவனை கம்பஹாவுக்கு அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம், முகநூல் ஆடை விற்பனை பக்கத்தினூடாக பெண்ணொருவரின் ஆபாச படங்களை சேகரித்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் கைதுசெய்யப்பட்டமை போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

2024.05.16 இணையத்தில் சிறார்களை துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்க அமைப்பொன்று இலங்கைக்கு அறிவித்துள்ளது. அதாவது இலங்கையில் இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், இணையத்தில் நிர்வாண புகைப்படங்களை பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக 55 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இணையம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறார்களை அச்சுறுத்துவது மற்றும் அழுத்தம் கொடுத்தல் தொடர்பில் 2023ஆம் ஆண்டில் 150 முறைப்பாடுகளும், இந்த வருடம் ஏப்ரல் 31 ஆம் திகதி வரை 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

2021, 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் துஷ்பிரயோகத்துக்காக சிறார்களை இணையத்தளங்களில் கோருவது 300% அதிகரித்துள்ளது என அமெரிக்க நிறுவனமான காணாமல்போன மற்றும் சுரண்டப்பட்ட சிறார்கள் தொடர்பான தேசிய மையம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலைமைகளை பார்க்கும் போது, தற்காலங்களில் அதிகமாக இணைய வழி துஷ்பிரயோகங்களைக் ஆதாரங்களுடன் காணக்கூடியதாக உள்ளன. இத்தகைய நிலைமைகளுக்கு பிள்ளைகள் தவறான வழியில் இணையத்தை பயன்படுத்துவதை கூறலாம். இதனை தடுப்பதற்காக சிறுவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை முறைசார் கல்வியினூடாகவும் முறைசாரா கல்வியினூடாகவும் முறையியல் கல்வியினூடாகவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதனை நோக்குவோமாயின், பிள்ளைகளை இணையத்தில் சுய தகவல்களை பகிராமல் இருக்க வழிப்படுத்தவேண்டும். அதாவது பெற்றோர்களின் / பாதுகாவலர்களின் அனுமதியின்றி புகைப்படங்களையோ அல்லது காணொளிகளையோ இணையத்தில் பகிரக்கூடாது என வழிப்படுத்தல். இதன் மூலம் பிள்ளைகளிள் பகிர எத்தனிக்கும்  புகைப்படங்கள் / காணொளிகள் தவறான முறையில் சென்றடையாது.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பாவனை இல்லாத கணக்குகளுக்கு குறுஞ்செய்தி மற்றும் தொடர்பாடல் ஏற்படுத்துவதை நிறுத்துதல் சிறந்ததாகும். காரணம், இணையத்தில் போலியான கணக்குகளில் இருந்து தொடர்புகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. மற்றும் தெரியாத நபர்களிடம் இருந்துவரும் கோரிக்கைகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோர்கள் வழிப்படுத்துவது சிறந்ததாகும். இவ்வாறு செய்வதன் மூலமாக தவறான தொடர்புகள் துண்டிக்கப்படும்.

நேரலை மற்றும் இணையத்தள பாவனை பாதுகாப்பு தொடர்பாக பிள்ளைகளிடத்தில் அறிவை வளர்த்தல் வேண்டும். உதாரணமாக பிள்ளைகள் பயன்படுத்துகின்ற கடவுச்சொற்களை பாதுகாத்தல், பிள்ளைகள் பொதுக் கணினியொன்றை அல்லது வேறொருவரின் கணினியைப் பயன்படுத்தும் போது ப்ரவுசரை மூடுவதற்கு முன் பிள்ளைகள் பிரவேசித்த சகல கணக்குகளிலிருந்தும் log out ஆகுதல் வேண்டும் என்ற தெளிவை பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்துதல் அவசியமான ஒன்றாகும்.

தொலைபேசி மற்றும் சமூக ஊடக கணக்குகளின் தனியுரிமை அமைப்புகளை காலத்துக்கு காலம் புதுப்பித்தல் மற்றும் பெற்றோர் கட்டுப்பாடு என்பது அதிகமாக டிஜிட்டல் கருவிகளில் உள்ளது. அதை பெற்றோர் சரியான முறையில் அறிந்து செயற்பட செய்வதாலும் சிறுவர்களை நேரலை ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

பிள்ளைகளின் ஒன்லைன் (Online) தொடர்புகளை பெற்றோர்கள் அடிக்கடி கண்காணித்தல் அவசியமாகும். அவர்கள் பயன்படுத்தப்படும் தளங்கள், அவர்களின் நண்பர்கள் மற்றும் அவர்களின் ஈடுபடும் உள்ளடக்கம் ஆகியவற்றை பற்றி நன்கு தெரிந்துகொள்வது அவசியமாகும். மற்றும் பிள்ளைகளின் சமூக ஊடக சுயவிபரங்கள் மற்றும் சாதனங்களில் தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்து கொடுப்பதனால் அவர்கள் பொதுவில் பகிரும் தனிப்பட்ட தகவல்களின் அளவை குறைக்கலாம்.

மிக முக்கியமாக பிள்ளைகளுக்கு புகாரளிப்பதை ஊக்கப்படுத்துதல் வேண்டும். அதாவது பிள்ளைகள் ஒன்லைனில் (Online) சந்திக்கும் தகாத அல்லது தவறான நடத்தையைப் புகாரளிக்க கற்றுக்கொடுத்தல். உதாரணமாக தளங்களில் அறிக்கையிடல் வழிமுறைகள் உள்ளன. சந்தேகத்திற்கிடமான அல்லது தீங்கு விளைவிக்கும் ஒன்லைன் (Online)நடத்தையை அடையாளம் காண பிள்ளைக்கு திறன்களை வழங்குதல்.

மேலும் சமீபத்திய ஒன்லைன் (Online)போக்குகள், பயன்பாடுகள் மற்றும் இயங்குதளங்கள் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் புதுப்பித்துக்கொள்ளுதல் (update) அவசியமாகும். இதன் மூலம் பிள்ளைகளை வழிநடாத்த முடியும். 

மேலும் இணையத்தின் மூலமான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக விழிப்புணர்வுத் திட்டம் போன்றவற்றில் பிள்ளைகளை பங்குகொள்ள செய்தல்.

சிறுவர்களுக்கு எதிரான இணையவழி மோசடிகள் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பல்வேறு சட்டங்களை கொண்டுள்ளது. இது தொடர்பான அறிவினையும் பிள்ளைகளுக்கு கல்வியின் மூலம் தெளிவினை ஏற்படுத்தல் வேண்டும். உதாரணமாக அரச சார்பற்ற நிறுவனம் என்ற அடிப்படையில் “எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும்” (PEACE/ ECPAT Sri Lanka) அமைப்பானது சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல், சிறுவர் கடத்தல், சிறுவர் தொழில், கட்டாய மற்றும் பலவந்த திருமணம், நேரலையில் சிறுவர்கள் பாலியல் ரீதியான சுரண்டப்படுதல் போன்றவற்றுக்கு எதிரான பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 286இல் குழந்தைகளின் ஆபாசமான வெளியீடுகளைக் கையாள்கிறது. இது புகைப்படம் எடுப்பது, எடுக்க முயற்சிப்பது மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாசமான பொருட்களை விநியோகம் செய்வதை தடைசெய்கின்றது. இவ்வாறான சட்டங்கள் தொடர்பான அறிவினை பிள்ளைகளுக்கு வழங்குவதன் மூலம் பிள்ளைகள் இணையத்தின் மூலமான துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகாமல், தைரியமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கு போராடுவார்கள். 

மேலும் தடுப்பதற்கு ஆயுதமாக சட்டத்தினை பயன்படுத்துவார்கள்.

பிள்ளைகள் இணையத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதனாலே இத்தகைய துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. பிள்ளைகள் வளரும்போதே அவர்களுக்கு சரியான பாதையை காட்டுதல் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். இணையத்தின் மூலம் பிள்ளைகளுக்கு பயனுள்ள பல அம்சங்கள் காணப்படுவதை தெளிவுப்படுத்தி அதை எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்ற ஆலோசனைகளை ஆரம்பத்திலிருந்தே கற்பிக்க வேண்டும். 

மேலும், இத்தகைய இணைய வழி சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பதற்கு மேற்குறிப்பிட்ட அம்சங்களை பிள்ளைகளுக்கு வளர்த்தல் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்களின் கண்காணிப்பு என்பன இணையத்தின் மூலமான துஸ்பிரயோகங்களை தடுத்து பிள்ளைகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இணையத்தினை மாற்றி அமைக்கலாம்.

போ.மெரினா சுதர்ஷினி

நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி.

கல்வி, பிள்ளைநலத்துறை

கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்