Paristamil Navigation Paristamil advert login

மம்தாவுக்கு துறவி அவதுாறு நோட்டீஸ்

மம்தாவுக்கு துறவி அவதுாறு நோட்டீஸ்

21 வைகாசி 2024 செவ்வாய் 02:44 | பார்வைகள் : 904


மேற்கு வங்கத்தில் பாரத் சேவா ஆசிரமத்தின் மீது அவதுாறு கருத்து பரப்பிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்கக்கோரி, ஆசிரம நிர்வாகி சுவாமி பிரதீப்தானந்தா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 42 லோக்சபா தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. நேற்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடந்தது.

முன்னதாக கடந்த 18ம் தேதி, மேற்கு வங்கத்தின் கோஹத்தில் திரிணமுல் காங்கிரசின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவா ஆசிரமத்தில் உள்ள சில துறவிகள், டில்லி பா.ஜ., தலைவர்களின் கட்டளைப்படி செயல்படுகின்றனர்; அவர்கள் தங்களின் ஆன்மிகப் பணியை விடுத்து, இது போன்ற பணிகளை தான் மேற்கொள்கின்றனர்,” என குற்றஞ்சாட்டினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “ஓட்டு வங்கி அரசியலுக்காக ஹிந்து அமைப்பினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை மம்தா சுமத்துகிறார்,” என விமர்சித்தார்.

இந்நிலையில் பாரத் சேவா ஆசிரம நிர்வாகி சுவாமி பிரதீப்தானந்தா, மம்தாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில், 'மம்தா தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சுவாமி பிரதீப்தானந்தா கூறுகையில், “என் மீது தனிப்பட்ட முறையில் அவதுாறு கருத்து கூறியிருந்தால், அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். ஆனால், எங்கள் சேவா ஆசிரமத்தைப் பற்றி, முதல்வர் மம்தா பானர்ஜி தவறாக பேசியுள்ளார். இதை, என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அவரது பேச்சுக்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.

மம்தா விளக்கம்

இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா நேற்று பாங்குராவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது: ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் சேவா ஆசிரமம் ஆகியவை சமுதாய நோக்குடன் பல்வேறு தொண்டுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்நிறுவனங்களுக்கு எதிராக நான் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், அதில் பணியாற்றும் சிலர் தான் அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக, பாரத் சேவா ஆசிரமத்தின் நிர்வாகி கார்த்திக் மஹாராஜ் என்கிற சுவாமி பிரதீப்தானந்தா என்பவர், முர்சிதாபாத் மாவட்டத்தில் பா.ஜ.,வுக்காக பணியாற்றி வருகிறார். இது போன்ற பணிகளில் ஈடுபடும்பட்சத்தில், பா.ஜ.,வில் இணைந்தே அவர் பணியாற்றலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்