சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்பில் பரபரப்பு தகவல்..!

24 சித்திரை 2024 புதன் 12:02 | பார்வைகள் : 5108
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லி ஆகிய இருவரும் மிகப்பெரிய சம்பளம் வாங்கும் நிலையில் இருவருக்கும் சம்பளம் கொடுக்காமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் என்பதும் அவர் நடித்து வரும் ’புஷ்பா 2’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படம் வெளியானதும் அவரது சம்பளம் உச்சத்தை எட்டும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ’ஜவான்’ படத்தை இயக்கிய பின்னர் அவரது சம்பளமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி ஆகிய இருவருக்குமே மிகப்பெரிய சம்பளம் கொடுக்க வேண்டிய நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இருவரையும் இந்த படத்தின் பார்ட்னராக சேர்த்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருவருக்கும் சம்பளம் கொடுக்காமல் லாபத்தில் பங்கு என்று உடன்பாடு எட்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ’ஜவான்’ போன்று ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தால், அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி ஆகிய இருவருக்குமே மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.