கேரட் பாயாசம்..
19 சித்திரை 2024 வெள்ளி 11:57 | பார்வைகள் : 1203
இனிப்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் வீட்டில் பாயசம் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் ஒரு துளி கூட மிச்சம் வைக்க மாட்டார்கள்.
எனவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பாயசத்தை ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் எப்படி செய்து கொடுக்கலாம் என்று இங்கே பார்க்கலாம். ஆமாம் இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு சுவையான பாயாசம் எப்படி செய்யலாம் என்று தான்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 5
பால் - 1 கப்
பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு
வெல்லம் - இனிப்பிற்கேற்ப
நெய் - தேவையான அளவு
முந்திரி - 10 - 15
உலர் திராட்சை - 8 - 10
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை :
முதலில் கேரட்டை நன்றாக அலசி அதன் தோலை சீவி கொள்ளவும்.
பின்னர் அதை பொடியாக துருவி எடுத்துக்கொள்ளுங்கள்.
தற்போது அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து நெய் ஊற்றி சூடானதும் துருவிய கேரட்டை போட்டு மிதமான தீயில் வதக்கிக்கொள்ளுங்கள்.
வதக்கிய கேரட் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கொள்ளுங்கள்.
நெய் சூடானதும் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பொடியாக நறுக்கிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு அதனுடன் ஒரு டம்லர் அளவிற்கு தண்ணீர் மற்றும் இனிப்பிற்கேற்ப நுணுக்கிய வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள கேரட் கலவையை சேர்த்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் 1 கப் பால் சேர்த்து கொதித்தவுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் கலந்துகொள்ளுங்கள்.
இறுதியாக அதன் மேல் நான்கு முதல் ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான கேரட் பாயாசம் ரெடி.