ராஜுமுருகன் படத்தில் இருந்து விலகிய எஸ்.ஜே.சூர்யா!
3 பங்குனி 2024 ஞாயிறு 09:54 | பார்வைகள் : 2626
தமிழ் சினிமாவில் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் எஸ் ஜே சூர்யா. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் எஸ் ஜே சூர்யாவுக்கு மட்டுமின்றி, அஜித் மற்றும் சிம்ரன் திரையுலக வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான படமாக மாறியது. கடந்த வாரம் இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது குறிப்பிடத்தக்கது இப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து, தளபதி விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார் எஸ் ஜே சூர்யா. இந்த படமும் சூப்பர்... டூப்பர்.. வெற்றி பெற்றதோடு மட்டும் இன்றி ஹிந்தி, தெலுங்கு, போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி வந்த இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக அவதாரம் எடுத்த திரைப்படம் 'நியூ'. இந்த படத்தில் தன்னுடைய முதல் பட நாயகியான சிம்ரனையே ஹீரோயினாக நடிக்க வைத்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து எஸ் ஜே சூர்யா கள்வனின் காதலி, வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதிகள், இசை, போன்ற பல படங்களில் நடித்தார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இதைத்தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'இறைவி' படத்தில் எஸ் ஜே சூர்யா ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல், வில்லனாகவும் மிரட்டி வருகிறார்.
இந்நிலையில் எஸ் ஜே சூர்யா, இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில்... உருவாகும் புதிய படத்தில், ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என செய்திகளும் கசிந்தன. ஆனால் இந்த படத்தில் இருந்து எஸ் ஜே சூர்யா அதிரடியாக விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக விஜயின் மாஸ்டர், கார்த்தியின் கைதி, போன்ற படங்களில் வில்லனாகவும், அநீதி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக இயக்குனர் ராஜு முருகன் நடிகர் கார்த்தியின் 25 வது படமான ஜப்பான் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது மட்டுமின்றி படு தோல்வியடைந்தது.