ஐ.பெரியசாமி மீதான முறைகேடு புகார்...வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
26 மாசி 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 8505
தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கிற்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.
அதன்படி, வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கிய குற்றச்சாட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளார். மேலும் வழக்கை மீண்டும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை நடத்தி வரும் ஜூலைக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் மார்ச் 28ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்கு பிணை செலுத்த உத்தரவிட்டுள்ளார். ஆஜராகாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan