நெத்திலி கருவாடு வறுவல்
21 மாசி 2024 புதன் 12:25 | பார்வைகள் : 1852
நெத்திலி கருவாடு வைத்து தொக்கு, ஊறுகாய், வறுவல் என வித்தியாசமாக சமைக்கலாம். நெத்திலி கருவாடு என்றாலே எந்த உணவுக்கும் பொருத்தமாக இருக்கும். அதன் மொறு மொறு சுவை எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியாகாது.
அந்த அளவிற்கு சுவை மிகுந்த நெத்திலி கருவாடை எப்படி பக்குவமாக மொறு மொறுவென வறுப்பது என்று இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெத்திலி கருவாடு - 250 கிராம்
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1
பூண்டு - 5 பல்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
முதலில் நெத்திலி கருவாடை சுடுதண்ணீரில் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
பிறகு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
வெங்காயம் சிறிதளவு வதங்கியவுடன் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கிக்கொண்டு இருக்கும் போதே சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளுங்கள்.
எண்ணெய் பிரிந்து வரும் போது சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி கருவாட்டை போட்டு நன்றாக மசாலாக்களுடன் நன்றாக சேரும்படி கலந்து விட்டுக்கொள்ளவும்.
பிறகு கருவாட்டை மூடி வைத்து சில நிமிடங்களுக்கு சமைக்கவும்.
கருவாடு லேசாக வெடிப்பது போல் வரும். அதுவரை வறுத்துக்கொண்டே இருங்கள்.
நெத்திலி கருவாடு நன்றாக பொரிந்து வெந்தவுடன் அடுப்பை அணைத்து தட்டிற்கு மாற்றினால் மொறு மொறுபான சுவையில் ‘நெத்திலி கருவாடு வறுவல்’ ரெடி…