பப்புவா நியூ கினியாவில் பாரிய மோதல் - 64 பேர் பலி
19 மாசி 2024 திங்கள் 09:46 | பார்வைகள் : 2932
பப்புவா நியூ கினியா நாட்டில் பழங்குடியின மக்கள் இடையே மோதலில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியாவில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் இங்கு வசித்து வருகின்றனர்.
பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோரேசெபியில் இருந்து 600 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வபாக் என்ற நகரம் மலைப்பகுதிகள் நிறைந்தது.
இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் இடையே நிலம் தொடர்பாக நீண்ட காலமாக மோதல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சிகின் மற்றும் கேகின் என்ற பழங்குடியின குழுக்கள் இடையே நடைபெற்ற மோதலில் 64 பேர் பலியாகியுள்ளனர்.
இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மோதலை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் நூற்றூக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.