Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சலார் படம் எப்படி இருக்கிறது?

சலார் படம் எப்படி இருக்கிறது?

22 மார்கழி 2023 வெள்ளி 11:25 | பார்வைகள் : 7160



'கேஜிஎப்' படத்திற்குப் பிறகு கன்னடத் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகரான பிரபாஸ் உடன் இணைந்து படம் செய்யப் போகிறார் என்ற அறிவிப்பு வந்ததுமே இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது.

இப்படத்தைப் பார்க்கும் போது மீண்டும் ஒரு 'கேஜிஎப்' சாயல், வலிமையான பாகுபலி போல பிரபாஸ் கதாபாத்திர சாயல் என இரண்டும் இணைந்த படமாக உள்ளது. வெறும் ஹீரோயிசம், ஆக்ஷன் ஆகியவற்றை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார்கள் இருவரும்.

ஒரு பக்கம் மன்னர் பரம்பரை, மறுபக்கம் மன்னர் நாற்காலியைப் பிடிக்க நடக்கும் அரசியல் ஆகியவைதான் இந்தப் படத்தின் கதை.

தனது அம்மாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவரைக் கடத்திச் செல்ல ஒரு கும்பல் திட்டம் போடுகிறது. இந்தியாவிலிருக்கும் மைம் கோபியின் உதவியை நாடுகிறார் ஸ்ருதியின் அப்பா. ஸ்ருதிஹாசனை, பிரபாஸிடம் சென்று பத்திரமாக இருக்க வைக்கிறார் கோபி. அம்மாவிடம் சத்தியம் செய்து எந்த சண்டையிலும் இறங்க மாட்டேன் என இருக்கிறார் பிரபாஸ். ஸ்ருதிஹசானைக் கடத்திய முதல் முயற்சியை அம்மா அனுமதியுடன் முறியடிக்கிறார். இரண்டாம் முறை கடத்தப்படும் போதும் ஸ்ருதியைக் காப்பாற்றுகிறார். தன்னை ஏன் கடத்த முயற்சிக்கிறார்கள், பிரபாஸ் யார் என கேட்கிறார் ஸ்ருதிஹாசன்.

அதற்கான விடையாக 'கான்சார்' என்ற ஒரு நாடு, அங்கு நடக்கும் மன்னர் பரம்பரை ஆட்சி, அதிகாரத்திற்காகக் போட்டியிடும் 'மன்னார், சௌரியா, ' ஆகிய குழுக்களுக்கு இடையேயான மோதல். கான்சாரைக் கைப்பற்றி பதவியில் உட்கார நினைக்கும் மன்னரின் முறையற்ற வாரிசான பிருத்விராஜ், அவரது நெருங்கிய நண்பன் பிரபாஸ் என படத்தின் இரண்டாம் பாதி ஒரு நீண்ட, நெடிய, குழப்பமான கதையைச் சொல்லி, இரண்டாம் பாகத்திற்கான 'லீட்' உடன் படத்தை முடித்திருக்கிறார்கள்.

பிரபாஸ் கதாபாத்திரத்தை சூப்பர்மேன், ராட்சசன், ஹல்க் என சூப்பர் ஹீரோ கதாபாத்திம் போல உருவாக்கியிருக்கிறார்கள். அவர் அடித்தால் ஐந்து பேர், பத்து பேர் விழவில்லை, நூறு பேர் விழுகிறார்கள். நண்பன் பிருத்விராஜுக்காக எதையும் செய்யத் துடிக்கும் 'தேவா' என்கிற 'சலார்' கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் என்பது அவருடைய ஈடுபாட்டிலேயே தெரிகிறது.

இந்த முதல் பாகத்தில் பிருத்விராஜ் இரண்டாவது கதாநாயகனாகவே வருகிறார். இடைவேளை சமயத்தில்தான் அவரது கதாபாத்திர அறிமுகம் வருகிறது. இரண்டாம் பாகத்தில் அவர்தான் படத்தின் வில்லனாக மாறுவார் என எதிர்பார்க்கலாம். தனக்காக சண்டை போட நண்பனை எப்படி தூண்டிவிடுகிறார் என்பதெல்லாம் அக்மார்க் வில்லத்தனம்தான். யாருக்கு யார் வில்லன், யாரை யார் ஏமாற்றினார்கள் என்பதும் இரண்டாம் பாகத்தில் பரபரப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. அவர் பிரபாஸைக் காதலிக்கவும் இல்லை, எந்த டூயட் பாடவும் இல்லை. இரண்டாம் பாகத்தில் வரலாம். பிரபாஸ் சண்டையிடுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பார்க்கிறார். பிரபாஸ் யார் என பிளாஷ்பேக்கைக் கேட்கும் போது ஆச்சரியப்படுகிறார்.

பிரபாஸின் அம்மாவாக ஈஸ்வரி ராவ், கான்சார் மன்னர் ஆக ஜெகபதிபாபு, அவரது மகளாக ஸ்ரேயா ரெட்டி, மகனாக கருடா ராம் ஆகியோர் மற்ற கதாபாத்திர நடிகர்களில் கவனிக்கப்படுகிறார்கள்.

ரவி பஸ்ரூர் பின்னணி இசை 'கேஜிஎப்' பின்னணி இசையை ஞாபகப்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, எடிட்டர் உஜ்வல் குல்கர்னி ஆகியோர் இரவு, பகலாய் உழைத்திருப்பார்கள். அன்பறிவ் சண்டைக் காட்சிகள்தான் படத்தின் இரண்டாவது இயக்கமாய் உள்ளது. ஒவ்வொரு அடியும் மரண அடியாய் உள்ளது. இருந்தாலும் சண்டைக் காட்சிகளில் அவ்வளவு கொடூரம், வன்முறை என ரத்தம் தெறிக்கிறது. அரங்க அமைப்புகள் ஒவ்வொன்றிலும் சிவகுமாரின் பிரம்மாண்ட உழைப்பு பக்கபலமாய் உள்ளது.

இடைவேளை வரையிலான படம் நகருவதே தெரியாமல் இடைவேளை வந்துவிடுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு பிளாஷ்பேக் ஆரம்பித்ததும் 'கான்சார்' பற்றிய காட்சிகள் அனைத்துமே குழப்பமாகவும், தொய்வாகவும், நீளமாகவும் அமைந்துள்ளது. பிரபாஸ் எப்போது எதிரிகளை அடிப்பார் என நீண்ட நேரம் காக்க வைக்கிறார்கள். படத்தின் பல 'வடிவங்கள்' 'கேஜிஎப்'ஐ ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்