Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

புது மாப்பிள்ளை அசோக் செல்வனின் சபா நாயகன் எப்படி இருக்கிறது.?

 புது மாப்பிள்ளை அசோக் செல்வனின் சபா நாயகன் எப்படி இருக்கிறது.?

22 மார்கழி 2023 வெள்ளி 10:33 | பார்வைகள் : 7754


பள்ளிப் பருவ காதல், கல்லூரி காதல், வேலை தேடும் போது வரும் காதல் என 'ஆட்டோகிராப், அட்டகத்தி, 96' படங்கள் போல ஒரு இளைஞனின் காதல்களை வைத்து, ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் சிஎஸ் கார்த்திகேயன் முயற்சித்திருக்கிறார்.

இந்த பள்ளிப் பருவ காதல்களை படங்களில் கதையாக வைக்கக் கூடாது என யாராவது தடை வாங்கினால் கூட நன்றாக இருக்கும் போலிருக்கிறது. படத்தில் காதலைச் சொல்ல கதாநாயகன் தயங்கித் தயங்கி தள்ளிப் போவதைப் போல, படத்தையும் இழுத்து இழுத்து நீட்டி இரண்டே முக்கால் மணி நேரம் கொடுத்து பொறுமையை சோதிக்கிறார் இயக்குனர்.


ADVERTISEMENT

Ads by
ஈரோட்டில் தனியார் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர் அசோக் செல்வன். பள்ளிக்குப் புதிதாக வந்து சேர்த்து கார்த்திகா மீது காதல் கொள்கிறார். ஆனால், பள்ளிப் படிப்பு முடியும் வரை அந்தக் காதலை சொல்லாமலே இருந்து விடுகிறார். அடுத்து இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்கிறார். அங்கு உடன் படிக்கும் சாந்தினி சௌத்ரியைக் காதலிக்கிறார். அந்தக் காதலும் பிரிவில் முடிகிறது. பின்னர் வேலை தேடி சென்னை வருகிறார். அங்கு பள்ளியில் படித்த கார்த்திகாவை மீண்டும் பார்க்கிறார். அவரிடம் இத்தனை வருடங்கள் கழித்தாவது காதலைச் சொல்லலாம் என முயற்சிக்கிறார். அதற்காக சில பல விஷயங்களைச் செய்கிறார். அத்தனை முயற்கிளுக்குப் பிறகு காதலில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் வந்து படத்தைப் பார்த்தால் போதும் என இயக்குனர் நினைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது. நீளமான படமாக, ஒவ்வொரு காட்சியும் மிகவும் நீளமாக இருந்தாலும் சில காட்சிகள் ரசனையாக அமைந்து ரசிக்க வைத்துள்ளன. அந்த சில காட்சிகளின் ரசனையை படம் முழுவதும் வைத்திருந்தால் முத்திரை பதித்த படமாக அமைந்திருக்கும்.

இந்தப் படத்தில் அசோக் செல்வனை பள்ளி மாணவனகாகக் காட்டியிருப்பதெல்லாம் டூ டூ மச். 'க்ளீன் ஷேவ்' தோற்றத்தில் இருந்தால் பள்ளி மாணவன் என ரசிகர்கள் நம்பிவிடுவார்கள் என நினைத்துவிட்டார்களோ ?. ஆனாலும், காலேஜ் மாணவனாகவும், வேலை தேடும் போது பழைய காதலியை அடைய துடிப்பவராகவும் நன்றாகவே நடித்திருக்கிறார் அசோக் செல்வன். அவருக்கு காமெடி இயல்பாகவே வருகிறது. நல்ல சுவாரசியமான காமெடியுடன் கூடிய கதைகளைத் தேர்வு செய்தால் சில பல ரவுண்டுகள் வருவார்.

காதல் கதைகளுக்குப் புதுமுகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என தேர்வு செய்துள்ளார்கள் போலிருக்கிறது. பள்ளி மாணவியாக கார்த்திகா முரளிதரன். பள்ளிக் காட்சிகளில் ஒரு பக்கம் வசனம் பேசியிருந்தாலே அதிகம். பல வருடங்களுக்குப் பிறகு அசோக்கை சந்தித்த பின்தான் அவருடைய நடிப்பும், பேச்சும் வெளிப்படுகிறது.

கல்லூரி மாணவியாக சாந்தினி சௌத்ரி. முதலில் அசோக்கைப் பிடிக்காமல் ஒதுங்கி, பின்னர் காதலில் விழுகிறார். பிடித்துப் போய் காதலிப்பவர் பிரிந்து போனதற்கான காரணம் நம்பும்படி இல்லை.

கதைக்குள் ஒரு கதையாக வரும் அசோக் செல்வன் எம்பிஏ படிக்கும் காட்சிகளில், எம்பிஏ மாணவியாக, காதலியாக மேகா ஆகாஷ். அடடா, அற்புதமான ஜோடி என சொல்ல வைக்கிறது.

இவ்வளவு காதல் கதைகளையும், அசோக் செல்வன் பிளாஷ்பேக்காகச் சொல்கிறார். அந்தக் கதைகளைக் கேட்கும் இன்ஸ்பெக்டராக மைக்கேல் தங்கதுரை கதாபாத்திரத்தில் ஒரு காதல் முடிச்சை வைத்திருக்கிறார்கள். கான்ஸ்டபிளாக மயில்சாமி, உடுமலை ரவி கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார்கள். அசோக் செல்வனின் அக்காவாக நடித்திருக்கும் விவியசந்த் கவனிக்க வைக்கிறார்.

அசோக் செல்வன் நண்பராக அருண் குமார், காதலிக்கும் எல்லா கதாநாயகன்களுக்கும் இப்படி ஒரு நண்பர் கண்டிப்பாக இருப்பார். காதலின் பல யதார்த்தங்களை சுவாரசியமாய் உணர்த்துகிறார் அருண்.

காதல் படங்களில் பாடல்கள் ஹிட்டாவது அவசியம். லியோன் ஜேம்ஸ் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம். பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கணேஷ் சிவாவின் படத்தொகுப்பில் நிறைய 'கட்டிங்' செய்திருக்கலாம்.

படத்தின் நீளம், ஒவ்வொரு காட்சிகளின் நீளம் ஆகியவை படத்தின் முக்கியக் குறைகள். முதல் பாராவில் குறிப்பிட்ட படங்களின் மற்றுமொரு 'வெர்ஷன்' தான் இந்தப் படம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்