ஓட்ஸ் பணியாரம்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9428
எடையை குறைக்க நினைப்போருக்கு ஓட்ஸ் மிகவும் சிறப்பான காலை உணவாகும். ஆனால் பலருக்கு ஓட்ஸின் சுவையானது பிடிக்காது. எனவே விரும்பி சாப்பிட வேண்டிய உணவை வலுக்கட்டாயமாக முகத்தை சுளித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் எந்த ஒரு உணவுமே உடலில் ஒட்டாது. அப்படி ஒட்டாவிட்டால், உணவில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்காது. நீங்கள் அப்படி ஓட்ஸை வெறுப்பவராக இருந்தால், அதனை காலையில் பணியாரம் போன்று செய்து சாப்பிடுங்கள். நிச்சயம் இந்த சுவை அனைவருக்குமே பிடிக்கும். சரி, இப்போது ஓட்ஸ் கொண்டு எப்படி பணியாரம் செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 3/4 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
வாழைப்பழம் - 1
சமையல் சோடா - 1 சிட்டிகை
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கோதுமை மாவு, நாட்டுச்சர்க்கரை, சமையல் சோடா, அரிசி மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை ஓட்ஸ் கலவையில் சேர்த்து, அதோடு தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும். இறுதியில் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கல்லில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து இறக்கினால், ஓட்ஸ் பணியாரம் ரெடி!!!