தமிழக முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு

11 மாசி 2025 செவ்வாய் 02:08 | பார்வைகள் : 1579
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் செய்வது குறித்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு பல நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்திற்கு எதிரான, மத்திய பா.ஜ., அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. தேசிய கல்வி கொள்கையையும், அதன் வழி மும்மொழி கொள்கையையும் திணிப்பதை நிராகரித்ததால், அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
'தமிழக மாணவர்களுக்கு உரிய 2,152 கோடி ரூபாயை பறித்து, வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளது. தங்கள் உரிமைகளுக்கு போராடும் மாணவர்களை தண்டிக்கும் நோக்கத்தில், இத்தகைய வலுக்கட்டாயமான செயலை மத்திய அரசு செய்கிறது.
'இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும், ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்காக, மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்படுத்தும் அளவிற்கு இரக்கமில்லாமல் நடந்து கொண்டது இல்லை' என, கூறப்பட்டிருந்தது.
இது குறித்து, மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:
நாடு முழுதும், 14,500 பள்ளிகளை மேம்படுத்தி, மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தும் நோக்கத்தில், பி.எம்.ஸ்ரீ திட்டம் உருவாக்கப்பட்டது.
இதில், 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6,448 பள்ளிகள் முதல் கட்டமாக இணைந்துள்ளன.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, டில்லி ஆகியவை மட்டுமே இதில் பங்கேற்கவில்லை. இந்த திட்டத்தில் இணைவது தொடர்பாக ஒப்பந்தம் செய்யும்படி, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
முதலில் இதற்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது. ஆனால், ஒப்பந்தம் செய்யவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு பல நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், பதில் வரவில்லை.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.