விரும்பினால் எல்லா மொழியும் கற்போம்; சீமான் உறுதி

16 மாசி 2025 ஞாயிறு 07:41 | பார்வைகள் : 2145
விரும்பினால் எல்லா மொழியும் கற்போம். கட்டாயம் கற்க வேண்டும் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியாது' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருப்பூரில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: ஹிந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. விருப்பம் உள்ளோர் ஹிந்தியை கற்றுக் கொள்ளட்டும். எதற்கு திணிக்க வேண்டும். அவரவர் தாய்மொழியே கொள்கை மொழியாக இருக்க முடியும். தொடர்பு மொழிக்காக ஆங்கிலத்தை பயன்படுத்திக் கொள்கிறோம்.
பல மொழி இனத்தை அழித்து ஒரே தேசமாக கட்டமைக்க முயற்சி நடக்கிறது. நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். இன்றைக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று ஒருவர் அமர்ந்து இருக்கும் இடத்தில், என்னை மாதிரி ஒருவர் இருந்திருந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? விரும்பினால் எல்லா மொழியும் கற்போம். கட்டாயம் கற்க வேண்டும் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியாது.
தாய்மொழியில் அறிவு, தெளிவு இருந்தால் உலகின் எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். உன் தாய் அழகானவர் என்று சொல்லும் உரிமை, தகுதி உனக்கு இருக்கிறது. எனது தாய் இழிவானவள் என்று சொல்ல உலகத்தில் யாருக்கும் தகுதி கிடையாது. உரிமையும் கிடையாது. இவ்வாறு சீமான் கூறினார்.