Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவை வடகொரியா தொடர்ந்து ஆதரிக்கும்! ஜனாதிபதி கிம் ஜாங்

ரஷ்யாவை வடகொரியா தொடர்ந்து ஆதரிக்கும்! ஜனாதிபதி கிம் ஜாங்

11 மாசி 2025 செவ்வாய் 16:30 | பார்வைகள் : 2191


உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுக்கு தனது நாட்டின் ஆதரவு தொடரும் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சுமார் 11,000 வீரர்கள் போரின் முன்கள வரிசைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால் முன்பு, கடுமையான இழப்புகள் காரணமாக அவர்கள் திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரஷ்யாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான "நீதியான காரணத்தை" வட கொரியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையே அதிகரித்து வரும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், கிம் வட கொரியா தனது அணு ஆயுத திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் வட கொரிய துருப்புகள் மீண்டும் முன்னிலை போர்க்களத்திற்கு திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களின்படி, வட கொரியா சுமார் 200 நீண்ட தூர பீரங்கிப் படைகளை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

 எதிர்காலத்தில் வட கொரியா கூடுதல் வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் பொருட்களை அனுப்பக்கூடும் என்ற சாத்தியமும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்