Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

இலங்கையில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

12 கார்த்திகை 2024 செவ்வாய் 09:59 | பார்வைகள் : 643


அமைதியான தேர்தலை நடத்த அரசியல் கட்சிகளும், சுயேச்சை குழுக்களும், பொது மக்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதுடன், நாளை வியாழக்கிழமை இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக கடமையை வாக்காளர்கள் தவறாது நிறைவேற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க,

”இதுவரை வாக்காளர் அட்டையை கிடைக்க பெறாதவர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் மற்றும் தபால் நிலையத்தில் அவற்றை பெற முடியும். வாக்களிக்க வாக்காளர் அட்டை கட்டாயம் இல்லை. தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகள் ஊடாக வாக்களிக்க முடியும்.

தேசிய அடையாள அட்டை, செல்லுப்படியாகும் கடவுச்சீட்டு, செல்லுப்படியாகும் சாரதி அனுமதி பத்திரம், அரச சேவையில் ஓய்வுபெற்றவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, பதிவாளர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள மத குருமார்களுக்கான அடையாள அட்டை, பதிவாளர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடான கடிதம், விசேட தேவையுடையோருக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். இதற்கு அப்பாலான எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுப்படியாகாது.

வாக்குச் சாவடியில் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல், தொலைபேசிகளை பயன்படுத்தல், போதைப்பொருள் பாவனையுடன் வாக்களிக்க வருகை தரல், ஆயுதங்களை வைத்திருத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

சாக்குச் சாவடிக்கு உட்பட்ட 500 மீற்றர் பகுதியில் வாக்கை கோருவது, குறிப்பிட்ட தரப்புக்கு வாக்களிக்க வேண்டாம் என கோருவது, துண்டு பிரசுரங்களை வழங்கல், சின்னங்களை காட்சிப்படுத்தல், சின்னங்கள் பிரச்சாரம் செய்தல் உட்பட எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று அமைதிக்காலத்திலும் எவரும் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது.

பொதுத் தேர்தலில் இருவகையான வாக்குசீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. பொலன்னறுவை, மொனராகலை, கேகாலை மாவட்டங்களுக்கு ஒரே நிரலிலான வாக்கு சீட்டுக்களும், ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களுக்கும் இரு நிரல்களைக் கொண்ட வாக்கு சீட்டுக்களும் வழங்கப்படும்.

வாக்காளர் ஒருவர் கட்சியொன்றுக்கு அல்லது தாம் விரும்பு சுயேச்சை குழுவுக்கு வாக்களிக்க முடியும். அதன் பின்னர் புள்ளடியிட்டு விரும்பு மூன்று வேட்பாளருக்கு விருப்ப வாக்கை அளிக்க முடியும்.

இதேவேளை, நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் மௌனகாலம் அமுலாகி உள்ளதால் ஊடகங்களில் விளம்பரங்களை பகிரவும், பிரச்சாரங்களில் ஈடுபடவும் முடியாது. தற்காலிக தேர்தல் அலுவலகங்கள் அனைத்தும் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நீக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொலிஸார் அதனை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.

வாக்காளர்களை புள்ளடியை மாத்திரம் இடடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஜனாதிபதித் தேர்தலில் இலக்கங்களை இடுவது தொடர்பில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால், புள்ளடி இடும் முறை தொடர்பில் எமது மக்கள் நன்கு அறிவார்கள். நீண்டகாலமாக பின்பற்றும் இந்த முறையை பின்பற்றுமாறு கோருகிறோம்.

அரச ஊழியர்களுக்கு குறைந்தப்பட்சம் 4 மணித்தியாலம் விடுமுறை வழங்க வேண்டும். இது தனியார் ஊழியர்களுக்கும் பொருந்தும். வாக்காளர் ஒருவர் 40 கி.மீ. க்கு உட்படவராக இருந்தால் அரை நாள் விடுமுறையும், 40 முதல் 100 கி.மீ. க்கு உட்பட்டவராக இருந்தால் ஒருநாள் விடுமுறையும், 100 முதல் 150 கி.மீ. வரை இருந்தால் ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கி.மீ. க்கு மேல் இருந்தால் தூரத்தின் பிரகாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

தபால் வாக்குகள் எண்ணும் பணி பிற்பகல் 4 மணியின் பின்னரும், பிரதான வாக்குகள் எண்ணும் பணிகள் இரவு 7 .15 மணிக்கு பின்னரும் ஆரம்பிக்கப்படும். நள்ளிரவுக்கு முன்னர் முதல் பெறுபேற்றை வெளியிட முடியும் என எதிர்பார்க்கிறோம்.

வாக்களித்த பின்னர் பொது மக்களை வீட்டில் இருக்குமாறு கோருகிறோம். வாக்களித்த பின்னர் வாக்குச் சாவடிகள் மற்றும் வீதிகளில் கூடியிருக்க வேண்டாம். வீதியில் ஒன்றுகூடி தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் வாக்கை உரிய வகையில் எண்ணி பெறுபேறுகளை வெளியிடும் முழுமையான பொறுப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கிறது. வாய்மூல தகவல்களை நம்ப வேண்டாம். ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ தகவல்களை நம்புமாறு கோருகிறோம்.

மூன்று கட்டங்களாக வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறும். தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகள் முதலில் எண்ணப்படும். இரண்டாம் கட்டமாக கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்பட்டு ஆசனங்கள் ஒதுக்கப்படும். மூன்றாம் கட்டமாக கட்சிகளில் வேட்பாளர்கள் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.

14ஆம் திகதி காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும். உரிய நேரத்தில் அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்து தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு கோருகிறோம்.” என்றார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்