'கங்குவா' படம் எப்படி இருக்கு..?
11 கார்த்திகை 2024 திங்கள் 14:56 | பார்வைகள் : 829
சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'கங்குவா'. பாகுபலி, RRR வரிசையில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் பிரபலங்கள் பாபி தியோல் மற்றும் திஷா படானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், போஜ்புரி என மொத்தம் 35 மொழிகளில் கங்குவா படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளுக்கும் மேல் இந்தப் படம் ரிலீஸாக உள்ளது.
படம் வெளியாகி நிச்சயம் 1000 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியா படமாக உருவெடுத்துள்ளது கங்குவா.
சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மக்களை வாய்பிளக்க வைத்தது, படத்தின் பிரம்மாண்டமும், சூர்யாவின் கெட்டப்பும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படம் உலகம் முழுவதும் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சென்னை, மும்பை, ஹைதராபாத் என படக்குழு மும்மரமான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கங்குவா படத்தின் ப்ரீபுக்கிங் இப்போதே வசூல் வேட்டையைத் துவங்கிவிட்டது. சமீபத்தில், கங்குவா திரைப்படம் சென்சார் செய்யப்பட்டது, படத்தை பார்த்த தணிக்கை குழு U\A சான்றிதழ் கொடுத்தது. கங்குவா படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 34 நிமிடம் என்றும், படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தை மனதார பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படம் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளதாகவும், தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில்அமைந்துள்ள இந்த படம் நிச்சயம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று சென்சார் குழு படத்தை புகழ்ந்துள்ளது என்ற தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது.