பொய் சொல்வதால் உண்மை மாறாது: பாக்.,கிற்கு இந்தியா பதிலடி
10 கார்த்திகை 2024 ஞாயிறு 05:29 | பார்வைகள் : 586
காஷ்மீர் குறித்து பொய்யை பரப்புவதால், உண்மை மாறாது, என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கூறியுள்ளது.
நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில், ஐ.நா.,வின் அமைதி காக்கும் நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடந்தது. இதில், பேசிய பாகிஸ்தான், வழக்கம் போல் காஷ்மீர் குறித்த விவகாரத்தை எழுப்பியது.
இதற்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியா குழுவிற்கு தலைமை தாங்கிய ராஜ்யசபா எம்.பி., சுதான்ஷூ திரிவேதி கூறியதாவது: இந்த சபையின் நடவடிக்கையை மீண்டும் திசைதிருப்பும் முயற்சியாக பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்கு எதிராக பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்துகிறது.
ஜம்மு காஷ்மீர் மக்கள் சமீபத்தில் தங்கள் ஜனநாயக உரிமை மூலம் ஓட்டுப்போட்டு புதிய அரசை தேர்வு செய்தனர். பாகிஸ்தான் இதுபோன்ற பொய்களில் இருந்து விலக வேண்டும். அவை உண்மையை மாற்றாது. ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.