டிசம்பர் 6 விஜய் - திருமாவளவன் சந்திப்பு ?
2 கார்த்திகை 2024 சனி 04:12 | பார்வைகள் : 958
வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் பிரமாண்ட விழாவில், அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெற்றுக் கொள்கிறார்.
புத்தகத்தின் ஆசிரியர், 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற கோஷத்தை உருவாக்கி, சில நாட்களுக்கு முன் பரபரப்பை கிளப்பிய வி.சி., துணை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா.
ஆதவ் எழுப்பிய திடீர் கோஷம் தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தியது. ஆனால், அவரது பேச்சால் யாருக்கும் அதிருப்தி இல்லை; தி.மு.க., கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று சொல்லி சமாளித்தார் திருமாவளவன். ஆதவ் மீது நடவடிக்கையை எதிர்பார்த்த தி.மு.க.,வுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.
பின்னணி
இந்த பின்னணியில் தான், தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டை விக்கிரவாண்டியில் விஜய் நடத்தினார். அதில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததை நாடே வியப்புடன் பார்த்தது. மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய விஜய், வி.சி.,க்கள் மனம் குளிரும் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
த.வெ.க.,வோடு இணைந்து தேர்தல் களத்தை சந்திக்கும் கட்சிகளுக்கு, ஆட்சி அதிகாரத்தில் உரிமையும் பங்கும் உண்டு என்பதுதான் அந்த அறிவிப்பு. இதை இவ்வளவு அழுத்தம் திருத்தமாக விஜய் சொன்னபின், அதன் பின்னணியில் ஆதவ் இருக்கலாமோ என்ற சந்தேகம் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழக உளவுத்துறையின் கவனம் விஜய், திருமா, ஆதவ் மீது திரும்பியது. தகவல் சேகரித்து தர, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கிடைத்த முதல் தகவலே முக்கியமான தகவலாக அமைந்தது.
அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அம்பேத்கர் பற்றிய நுால் வெளியீட்டு விழாவில், திருமாவளவனும் விஜய்யும் ஒரே மேடையில் பேச உள்ளனர் என்ற தகவல், ஆளும் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
உளவுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கடந்த 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,வுக்காக அனைத்து உத்திகளையும் வகுத்துக் கொடுத்த, ஓ.எம்.ஜி., என்ற 'ஒன் மேன் குரூப்'பில் முக்கிய பங்காற்றியவர் ஆதவ். 2021 சட்டசபை தேர்தலுக்கு வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கு அ.தி.மு.க., அழைப்பு விடுத்து அட்வான்ஸ் கொடுத்த விஷயம், ஆதவுக்கு தெரிந்தது. உடனே டில்லி சென்று கிஷோரிடம் பேசினார்.
சந்தேகம்
கிஷோரை சரிக்கட்டி தி.மு.க., பக்கம் திருப்பி, வியூக அமைப்பாளராக நியமித்ததில், ஆதவ் பங்கு முதன்மையானது.
கிஷோரின் ஆலோசனையின்படி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரையும் ஆதவ் தன் வீட்டுக்கு வரவழைத்து பேசினார். அந்த தலைவர்களுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார்.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அவருக்கும் தி.மு.க., தலைமைக்குமான உறவில் விரிசல் உண்டானது. கட்சியின் இமேஜ் குறித்த அவரது ஆலோசனைகளை, குறுக்கீடுகளாக கருதினர்.
இதையடுத்து, ஆதவ் ஏமாற்றத்துடன் வெளியேறினார். திருமாவிடம் பேசி, அவருடைய கட்சியில் இணைந்தார். துணை பொதுச்செயலர் பொறுப்பும் கிடைத்தது.
கசப்பு
லோக்சபா தேர்தலில், ஆதவ் போட்டியிட வசதியாக, கள்ளக்குறிச்சி பொது தொகுதியையும் சேர்த்து கேட்டார் திருமாவளவன். விஷயம் தெரிந்து கொண்ட தி.மு.க., அத்தொகுதியை தர மறுத்து விட்டது.
இந்த கசப்புகள் எல்லாம் சேர்ந்துதான், திருமா முன்னிலையில் ஆட்சியில் பங்கு கோஷத்தை எழுப்ப வைத்துள்ளது. தேர்தல் உத்தியின் அடுத்தகட்டமாக, விஜயை முன்னிறுத்தி தி.மு.க.,வுக்கு எதிரான காய் நகர்த்தல்களில் இறங்கியுள்ளார். அதன் அடையாளமாக தனது நுால் வெளியீட்டு விழாவை திட்டமிட்டுள்ளார்.
விஜய், திருமா சந்திப்புக்காகவே இந்த நுாலை அவர் எழுதியிருக்கலாம் என்று தெரிகிறது. இரு தரப்பின் சம்மதம் பெற்று, இருவரையும் தொலைபேசியில் பேச வைத்துள்ளார். 6ம் தேதி விழாவுக்குப்பின், தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.
யார் இந்த ஆதவ்?
திருச்சியை சேர்ந்த ஆதவ், ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். கூடைப்பந்து வீரராக இருந்தார். தமிழக விளையாட்டு விடுதியில் தங்கி படித்த இவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் மகள் டெய்சியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின், மார்ட்டினின் தொழில்களை கவனித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் துவக்கிய, 'ஓ.எம்.ஜி' அமைப்பில் இணைந்து பணியாற்றினார். 2021 சட்டசபை தேர்தல் வெற்றிக்குப் பின், அங்கிருந்து வெளியே வந்த ஆதவ் அர்ஜுனா, அரைஸ் என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தைத் துவங்கினார்.
பின், 'வாய்ஸ் ஆப் காமன்' என்ற பெயரில், ஒரு சர்வே அமைப்பை உருவாக்கினார்.
இந்நிலையில், தன்னுடைய நிதி நிறுவன பொறுப்பில் இருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்ட ஆதவ் அர்ஜுனா, நிறுவனத்தை முழுமையாக ஏற்று நடத்தும் பொறுப்பை, தன்னுடைய மனைவி டெய்சியிடம் விட்டார்.
தி.மு.க., தரப்புக்காக பணியாற்றிய காலத்திலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் நெருக்கமாக இருந்த ஆதவ், அவருடைய ஆலோசனையின் படி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலரானார்.
சிறு சிறு தொழில்களில் இருந்தும் தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்ட ஆதவ் அர்ஜுனா, தற்போது முழு நேர அரசியல்வாதியாகி உள்ளார்.
வி.சி.,க்களுக்கான மாநாடுகளை ஏற்பாடு செய்து கொடுத்து, அக்கட்சிக்கான தேர்தல் வியூகத்தையும் வகுத்துக் கொடுத்தார். 2024 லோக்சபா தேர்தலில், வி.சி.,க்கள் சார்பில் சிதம்பரத்திலும், விழுப்புரத்திலும் போட்டியிட்ட தலைவர் திருமாவளவன் மற்றும் பொதுச்செயலர் ரவிக்குமார் ஆகியோரின் வெற்றிக்காக, இரு தொகுதிகளிலும் மாறி மாறி பணியாற்றினார். இது கட்சியினர் மற்றும் தலைமையை வெகுவாக ஈர்த்தது.
தற்போது, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத் தலைவராகவும், தமிழக ஒலிம்பிக் சங்க பொதுச்செயலராகவும் உள்ளார். கடந்த ஆண்டு இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரானார்.