இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
1 கார்த்திகை 2024 வெள்ளி 16:00 | பார்வைகள் : 1278
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொள்வனவு விலைமனுகோரலுக்காக வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கமைய 'பி' தொகுதிக்கமைய 50,000 வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அடுத்த மாதம் முதல் கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்கு திரும்பும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த தொகைக்கு மேலதிகமாக இந்த மாதம் நடுப்பகுதியில் மேலும் 100,000 வெற்றுக் கடவுச்சீட்டுக்களும், டிசெம்பர் மாதம் மேலும் 150,000 வெற்றுக் கடவுச்சீட்டுக்களும் கிடைக்கப் பெறவுள்ளன. அத்துடன் 750,000 வெற்றுக் கடவுச்சீட்டுக்கள் எதிர்வரும் மாதமளவில் கிடைக்கப் பெறவுள்ளன.
அத்துடன் மேலதிகமாக வெற்றுக் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கான பெறுகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 1600 கடவுச்சீட்டுக்கள் விண்ணப்பதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நிலையில், இந்த தொகையை எதிர்வரும் மாதம் முதல் அதிகரிப்பதற்கான இயலுமை காணப்படுகிறது.
முறையான வழிமுறைக்கு அமைய நிகழ்நிலை முறைமை ஊடாக விண்ணப்பதார்கள் சேவையை பெற்றுக் கொள்வதற்கு நேரம் மற்றும் திகதியை ஒதுக்கிக் கொள்வதற்கு தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.