Paristamil Navigation Paristamil advert login

மேஜர் முகுந்தனுக்கு நியாயம் சேர்த்தாரா சிவகார்த்திகேயன்..?

மேஜர் முகுந்தனுக்கு நியாயம் சேர்த்தாரா சிவகார்த்திகேயன்..?

31 ஐப்பசி 2024 வியாழன் 14:06 | பார்வைகள் : 1244


ராணுவத்தை மையமாக வைத்து 90களில்தான் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் சில பல படங்கள் வந்தன. அதன்பின் தமிழ் சினிமாவில் அப்படியான படங்கள் அதிகம் வந்ததில்லை. எப்போதாவது ஒரு முறைதான் வந்து கொண்டிருந்தன. இந்த 'அமரன்' திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக அவரது திறமையை, போராட்டத்தை, தியாகத்தை வெளிப்படுத்தும் நிறைவான ஒரு படமாக வந்துள்ளது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. காஷ்மீர் கதைக்களம், முஸ்லிம் தீவிரவாதிகளின் தாக்குதல், எதிர்த்துத் தாக்கி காஷ்மீர் மக்களையும் காப்பாற்றத் துடிக்கும் இந்திய ராணுவம் என அது பற்றி இதுவரையில் தெரிந்து கொள்ளாத மக்களுக்குக் கூடத் தெளிவாகச் சொல்லி புரிய வைக்கும்படியான ஒரு படம்.

தன்னை விடவும், தனது 44 ராஷ்ட்ரிய ரைபிள் படையில் இருக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரின் நலனுக்காகவும் செயல்பட்ட மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படத்தை இன்றைய தலைமுறையும் தெரிந்து கொள்ளும். படம் முடிந்த பின் தியேட்டரில் பலர் கண்கலங்கியதைப் பார்க்க முடிந்தது. அதுவே படக்குழுவினருக்குக் கிடைத்த வெற்றி.

முகுந்த் வரதராஜனின் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படிப்பு, அங்கு படிக்க வந்த மலையாளப் பெண்ணான இந்து ரெபேக்கா வர்கீஸ் உடனான சந்திப்பு, பின் காதல், சென்னை ஓடிஏவில் ராணுவ அதிகாரிப் பயிற்சி, ராஜ்புத் ரெஜிமென்ட்டில் லெப்டினென்ட் பதவி, எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஓசி) பகுதியில் அடுத்த பணி, இந்தூர் ராஜ்புத் பணி, ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவில் மேஜர் பதவி, தீவிரவாதிகளை எதிர்த்து ஆபரேஷன், இரண்டு முக்கிய முஸ்லிம் தீவிரவாதிகளைக் கொன்ற பின் வீரமரணம் என முகுந்தின் வாழ்க்கைப் பயணத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள்.

மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன். இதற்குப் பிறகு எத்தனை சிறந்த படங்களில், கதாபாத்திரங்களில் நடித்தாலும் இந்தப் படம்தான் சிவகார்த்திகேயனுக்குப் பேர் சொல்லும் படமாக நிலைத்து நிற்கும். அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்திற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ராணுவ அதிகாரி கதாபாத்திரத்திற்குரிய பயிற்சியை எடுத்து இந்தக் கதாபாத்திரத்தில் அதை உடல்மொழியாலும், நடிப்பாலும் மிக நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய வீர மரணமும், தியாகமும் படம் முடிந்து வெளிவந்த பின்னும் கண்களில் அப்படியே நிற்கிறது.

முகுந்த் வரதராஜன் காதலியாக, பின்னர் மனைவியாக, பெண் குழந்தைக்கு அம்மாவாக அடுத்தடுத்த காலகட்டங்களில் நகரும் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியின் நடிப்பு அற்புதம். 'பிரேமம்' மலையாளப் படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், இந்தக் கதாபாத்திரத்தில் அவருக்கான தேர்வை அவ்வளவு அழகாய் பூர்த்தி செய்திருக்கிறார். முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் காட்சியில் கண்களில் வழியும் கண்ணீரை சமாளித்துத் துடைத்து பார்க்கும் அந்தப் பார்வை வரை சாய் பல்லவியை இந்து கதாபாத்திரமாக மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு வேறு யாரும் விண்ணப்பித்து விடாதீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

முகுந்த் வரதராஜனின் வலது கரமாக செயல்படும் சிப்பாய் விக்ரம் சிங் கதாபாத்திரத்தில் புவன் அரோரா, கர்னல் அமித் சிங் டபாஸ் கதாபாத்திரத்தில் ராகுல் போஸ், முகுந்த் அம்மாவாக கீதா கைலாசம், அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஆகியோரும் மற்ற கதாபாத்திரங்களில் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்தை ஒரு கம்பீரத்திற்குக் கொண்டு செல்கிறது. பல்வேறு இடங்களில் பதுங்கிப் பாய்கிறது சிஎச் சாய் ஒளிப்பதிவு. பரபரபவென படத்தொகுப்பு செய்திருக்கிறார் கலைவாணன்.

எந்தப் படமாக இருந்தாலும் அதில் ஏதாவது சிறு குறை இருக்கலாம். இந்தப் படத்தில் எங்காவது சில குறைகள் தெரிந்தாலும் அதை தாராளமாகப் புறக்கணிக்கலாம். இப்படி ஒரு முயற்சியை எடுத்து மக்களிடமும் தேசப்பற்றை விதைக்கும் இம்மாதிரியான படங்களை வரவேற்க வேண்டும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்