நவம்பர் 1 முதல் OTP வராதா? டிராயின் புதிய விதியால் மொபைல் பயனர்களுக்கு சிக்கல்
29 ஐப்பசி 2024 செவ்வாய் 10:20 | பார்வைகள் : 867
டிராயின்(TRAI) புதிய விதியால் நவம்பர் 1 முதல் OTP வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் பண மோசடிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மொபைல் போனுக்கு வரும் OTP யை பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது போன்ற மோசடிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மோசடிகளைத் தடுக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.
வர்த்தக எஸ்எம்எஸ் அனுப்பும் முதன்மை நிறுவனங்கள், அவற்றின் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்களிடம் தங்களது பெயர் சுருக்கம், டெம்ப்ளேட் ஆகியவற்றை மட்டுமே பதிவு செய்வது இப்போது உள்ள வழக்கம்.
இதனால், அவை என்ன தகவல் அனுப்புகின்றன என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அணுக முடியாத வண்ணம் இருந்தது. இனி என்ன தகவல் அனுப்பப்படுகிறது, எந்த எண்ணில் இருந்து அனுப்பப்படுகிறது என்ற தகவலை தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனி OTP டெலிவரிக்கு முன் இந்த தகவல் சரிபார்க்கப்படும். அதில் சரியாக இருக்கும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே வாடிக்கையாளரை சென்றடையும். உதாரணமாக, அனுப்பப்படும் தகவலில், திரும்ப அழைக்கக்கூடிய எண், வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடியதாக இல்லாவிட்டால், அந்த எஸ்.எம்.எஸ்., தடை செய்யப்படும். வாடிக்கையாளரின் போனில் டெலிவரி ஆகாது.
இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த டிராய் உத்தரவிட்டுள்ளது. டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களும், தொலைபேசி நிறுவனங்களும் ஒரு மாத அவகாசமாவது வழங்கி, டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டன. ஆனால் டிராய் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
எனவே நவம்பர் 1 முதல் அனைத்து பயனர்களுக்கு OTP வருவதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண பரிவர்த்தனை, இ-காமர்ஸ் ஆகியவற்றுக்கு OTP கட்டாயம் என்ற நிலையில் இது பயனர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.