ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
18 புரட்டாசி 2024 புதன் 06:09 | பார்வைகள் : 669
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம் வான்தான் என்புகழ்" எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!
தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம். ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம். இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்; தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள். இன்று மாலை பவள விழா - முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.