பருப்பு அடை
17 புரட்டாசி 2024 செவ்வாய் 15:30 | பார்வைகள் : 448
தற்போது நாம் பார்க்கப்போகும் சமையல் ரெசிபியானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஆரோக்கியமான பருப்பு அடையை எளிதாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று தான்…இந்த பருப்பு அடையை காலை உணவாக சட்னி, மிளகாய் பொடி அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
மசூர் பருப்பு - 1/2 கப்
உடைத்த பச்சை பயிறு - 1/2 கப்
காய்ந்த சிவப்பு மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை :
கடலை பருப்பு, பாசிப்பருப்பு, மசூர் பருப்பு மற்றும் உடைத்த பச்சை பயிர் ஆகியவற்றை ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்தது 6 முதல் 8 மணிநேரம் வரை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
தற்போது ஊறவைத்த பருப்புகளை நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், காய்ந்த சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து சற்று கரடுமுரடாக அரைக்கவும்.
அரைப்பதற்கு கடினமாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
குறிப்பு : மாவில் அதிகம் தண்ணீர் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் ஒரு சிட்டிகை பெருங்காய தூளை சேர்த்து மாவின் நிலைத்தன்மை தோசை மாவை விட சற்று கெட்டியாக இருக்குமாறு கலந்துகொள்ளுங்கள்.
அடுத்து தோசை கல் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் மாவை எடுத்து தோசைக்கல்லில் வட்டமாக தட்டிக்கொள்ளவும்.
ஒருபுறம் அடை நன்றாக வெந்தவுடன் மறுபுறம் திருப்பி வேகவிடவும்.
அடை இருபுறமும் பொன்னிறமாக மாறி வெந்தவுடன் எடுத்து அனைவருக்கும் சூடாக சர்க்கரை, சட்னி அல்லது பொடியுடன் சேர்த்து பரிமாறவும்…