டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது சுப்ரீம் கோர்ட்
13 புரட்டாசி 2024 வெள்ளி 06:52 | பார்வைகள் : 849
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை அமலாக்கத்துறை, சி.பி.ஐ,. விசாரித்து வருகிறன்றன. இதில் நடந்த பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே வழக்கில் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி சி.பி.ஐ, வழக்குப்பதிவு செய்து திகார் சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை கைது செய்தது. இரு வழக்குகளும் டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சி.பி.ஐ. கைதுக்கு எதிராகவும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான பெஞ்ச் இன்று(செப்.,13) விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
* அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ., கைது செய்ததில் எந்த விதமான விதிமீறலும் இல்லை.
* கெஜ்ரிவாலை கைது செய்ததில் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன.
* ஜாமினில் வெளியே செல்லும் கெஜ்ரிவால் வழக்கு தொடர்பாக பொதுவெளியில் பேசக்கூடாது. பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்தது. தற்போது சி.பி.ஐ., வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமினில் வழங்கி உள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து, அவர் விடுதலையாகிறார்.