Paristamil Navigation Paristamil advert login

Factum Perspective: தெற்காசியாவில் "மக்களுக்கு நட்புறவானது" என்பதிலிருந்து "நண்பர்களுக்கு நட்புறவானதாக" ஆகிய ஜனநாயக ஆட்சி 

Factum Perspective: தெற்காசியாவில்

11 புரட்டாசி 2024 புதன் 10:03 | பார்வைகள் : 574


ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக பங்களாதேஷில் நடந்த மக்கள் எழுச்சி தெற்காசியாவின் கண்களைத் திறப்பதாக மாற்றமடைந்துள்ளது. இது நம் அயற்புறத்தில் வெளிப்படும் நிகழ்வுகளின் தொடர் நகர்வின் முடிவை அல்லாது, ஆரம்பத்தைக் குறிக்கலாம்.

இந்த பகுப்பாய்வானது சுதந்திரம் பெற்றதிலிருந்து சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைப் பெருமையாகக் கொண்ட தெற்காசிய நாடுகளில் ஜனநாயக ஆட்சி என்று அழைக்கப்படுபவற்றின் போக்குகள் மற்றும் வடிவங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜனநாயக அரசாங்கங்கள் தேர்தலுக்கு முன்பு மக்கள் நட்புறவுடனாக இருப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தன, ஆனால் பின்னர் அதிகாரத்தில் உள்ள நபர்களுடனான நட்புறவுடன் நெருங்கிய கூட்டணியை உருவாக்குவதன் மூலமாக நண்பர்களுக்கு நட்புறவானதாக மாறியது.

ஜனநாயகம் பல மாதிரிகளைக் கொண்டுள்ளதுடன் தெற்காசியாவில் நாம் மரபுரிமையாகப் பெற்றிருப்பது முதன்மையாக மேற்கில் வளர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். உண்மையான உலகம் இந்தக் கட்டமைப்பிற்குள் இயங்கவில்லை என்பது தெளிவாகிறது. உதாரணமாக, காஸாவில், மேற்கு நாடுகள் செல்ல விரும்பாத இடங்களில் நியாயாதிக்கம் அல்லது கட்டுப்பாட்டைப் பயன்படுத்தாமல் வெறுமனே அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை செயற்படுவதை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பார்க்க விரும்புகின்றன என்பது தெளிவாகிறது.

அந்த வழியில், தெற்காசியாவின் ஜனநாயகங்களும் ஜனநாயகத்தின் அர்த்தத்தை மீள்வடிவமைத்துள்ளதுடன், இதன் மூலம் அரசாங்கங்கள் தங்களை நிலைநிறுத்தி, பல தசாப்தங்களாக வாக்குச்சீட்டின் பலத்தில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளன.

தெற்காசியப் பிராந்தியமானது தேர்தல் நேரத்தில் மிகவும் மக்களுடன் நட்புறவுடன் இருக்கின்ற, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு "நண்பர்களுக்கு நட்புறவுடன்" ஆகிய அரசியல்வாதிகளின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். இலங்கையில் ஊழலும் உறவுமுறையும் அங்குதான் ஊடுருவ ஆரம்பித்தது. டாக்காவில் இதே நிலைதான், பங்காபந்து விசுவாசிகளும் தேர்தல் கொள்ளைகளில் பெரும் பங்குகளைப் பெறுவதற்கான உரிமை என்று நம்புகிறார்கள்.

இவை ஆடம்பரமான உட்கட்டமைப்பு அபிவிருத்தி இருந்தபோதிலும் பரந்த பொது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய ஜனநாயகத்திற்கான உன்னதமான விடய ஆய்வுகளாகும். இலங்கை மற்றும் பங்களாதேஷ் நெருக்கடியின் போது பிராந்தியம் இந்த போக்குகளைக் கண்டதுடன் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளாத வகையில் அதன் நிதி நிலையை சரிசெய்யும் அளவுக்கு விரைவானதாக இருந்தது. மக்கள் எழுச்சி என்பது வெறுமனே முறையற்ற நிதியியல் முகாமைத்துவதின் காரணமாக அல்ல, மாறாக மக்களின் நம்பிக்கையில் அரசாங்கத்தின் மாபெரும் தோல்வியின் காரணமாக வரும் என்பதே அவர்கள் கணக்கெடுக்க தவறியதாகும். 

இதுவும், பொருளாதார மற்றும் அரசியல் தவறான முகாமைத்துவதிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த போது, அப்போதைய பதவியில் இருந்தவரின் ஆதரவாளர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க நினைத்த இலங்கையில் நடந்ததைப் போன்றே உள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளிலும் மக்கள் நட்புறவான நிர்வாகம் மக்கள் தலைமையிலான போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இடைவெளியை அதிகரிப்பதில் ஊடகங்களின் வகிபங்கு

பங்களாதேஷ் கிளர்ச்சியின் போது இந்திய ஊடகங்கள் போராட்டங்களை இந்து எதிர்ப்பு இயக்கமாக சித்தரித்தன. இது இந்தியாவிலுள்ள பிரபலமான விபரிப்புகளுடன் பொருந்தியிருக்கலாம், ஆனால் அது நீண்ட காலத்திற்கு பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவியது.

ஊடக உள்ளடக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை, பிராந்தியத்தில் என்ன நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதுடன் அனைவருக்கும் கரிசனமளிப்பதாகும். ஆயினும்கூட, இந்த நிகழ்வுகள் ஓர் ஆத்திரமூட்டும் வகையில் முன்வைக்கப்பட வேண்டுமா என்பது வினாவாகும். எது எப்படியிருந்தாலும், அது பிராந்தியம் முழுவதிலும் இந்திய-விரோத கதைகள் மற்றும் உணர்வுகளை வலுப்படுத்த உதவியது.

அரசியல் வாதிகளும், மிக உயர்நிலை ஊடக நிறுவனங்களும் தேசியவாத அட்டையை செயற்படுவதற்காக வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, மாலைதீவில் சமீபத்திய ஆட்சி மாற்றத்தின் போது, சமூக ஊடகங்களில் உள்ளூர் அரசியல்வாதிகளின் கருத்துக்களுடன் தொடர்புடைய ஒரு சிறிய சம்பவத்தை இந்திய ஊடகங்கள் ஊதிப்பெருக்க வைத்து, மாலைதீவு டெல்லிக்கு எதிராக சாய்ந்துவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்கியது.

மாறாக மாலைதீவு அரசாங்கத்தை விட இந்திய ஊடகங்கள்தான் மாலேயில் உள்ள தற்போதைய அரசாங்கத்தை இந்திய விரோதியாகக் காட்டுவதில் சிரத்தை எடுத்ததாகத் தெரிகிறது. இத்தகைய உதாரணங்கள், இந்தியா அதன் உடனடி அண்டை நாடுகளில் உள்ள பிரபலமான கருத்துக்களின் கட்டுப்பாட்டை எப்படி இழந்துவிட்டதாகத் தோன்றுகிறது என்பதை விளக்குகிறது.

உள்ளக பிரச்சினைகளால் வெடித்தது

தெற்காசியா தனது உள்ளக பணியை சரியாக மேற்கொள்ளாது ஒரு பிராந்தியமாக இணைந்திருக்காவிட்டால், வெளிப்புற காரணிகள் தாக்கம் செலுத்த ஆரம்பிக்கும். இதன் விளைவுகள் வங்காள விரிகுடாவில் (BoB) அவதானிக்கப்படுவதுடன், இது அரபிக் கடலுடன் ஒப்பிடும்போது இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இடையே இன்னமும் உள்ளக விவகாரமாகும்.

இங்கு எழுப்ப வேண்டிய வினா, வங்காள விரிகுடாவை வெளித் தரப்பினருக்குத் திறந்துவிட விரும்புகிறோமா அல்லது சிறந்த பொதுஅறிவைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் உள்ள பதட்டங்களை நாமே தீர்த்து, தணிக்கச் செய்ய வேண்டுமா என்பதாகும். 

தற்போது, நமக்கு அவசியமானது பிராந்தியத்தின் கட்டுப்பாட்டையும் உரிமையையும் நாங்கள் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய பொதுவான நலன்களில் கவனம் செலுத்துவதேயாகும். அரசாங்கங்கள் முதலில் தங்கள் சொந்த மக்களைப் பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும், பின்னர் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சந்தேகத்தையும் வெறுப்பையும் வளர்ப்பதால் எந்தவொரு பிராந்தியமும் பயனடையாது. இந்திய ஊடகங்களால் கொண்டுவரப்பட்ட மாலைதீவு சுற்றுலா புறக்கணிப்பு இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

நாம் சரியாக செயற்படவில்லை என்றால், ஏற்கனவே பிளவுகளால் முடங்கிய சார்க், ஒருங்கிணைக்கப்பட வேண்டிய நேரத்தில் மேலும் பிளவுபடும். ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானை தலிபான் கைப்பற்றியமை சார்க் அமைப்பை கடும்போக்கு கூறுகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கியது. இன்னமும் சரியான ஒற்றுமை இல்லாத நிலையில், சார்க் இந்தச் சவாலைக் கட்டுப்படுத்த முடியுமா அல்லது எதிர்கொள்ள முடியுமா?

இப்பகுதியில் உள்ள அரசியல் உயரடுக்கினர் வேகமாக செயற்பட வேண்டும். உக்ரைன் மற்றும் காசாவில் உள்ள போர் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எல்லைகள் பற்றிய பழைய கருத்து இப்போது பயனற்றது என்பதை நிரூபிப்பதுடன், உலக விவகாரங்களில் அரச சார்பற்ற தரப்பினர்கள் எங்கும் காணப்படுகின்றனர்.

ஒரு வெளியக தரப்பினரின் செயற்பாடு

அரசுக்கு எதிரான உணர்வுகள் எழும்போதெல்லாம், சதி கோட்பாடுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த கோட்பாடுகள் அனைத்தும் அரசாங்கங்கள் அல்லது அரசியல் உயரடுக்கின் பாரிய அதிகாரத்தின் வீழ்ச்சிக்கு பங்களிப்பதிலும் அவை ஆட்சி மாற்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதிலும் ஒரே மாதிரியானதாக இருப்பதுடன் அவை தேவையற்ற கவனச்சிதறல்களாக காணப்படும்.

இந்த அனைத்து சதி கோட்பாடுகளின் ஓர் தனித்துவமான அம்சம், ஒரு தரப்பு அல்லது தனிநபரை அதிகாரத்தில் இருந்து அகற்றிய பிறகு ஓர் பிரார்த்தனையைப் போல ஓதப்படுவதுடன், அவை ஒரு குறிப்பிட்ட தரப்பின் அல்லது தனிநபரின் பாரிய தோல்விகளை மறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வெளியகத் தலையீடுகளைப் பொருட்படுத்தாமல், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முயற்சியை அரசுகள் மேற்கொள்ளவில்லை என்றால், போராட்டங்கள் நடாத்தப்படும் என்பதே இதிலிருந்து எடுக்க வேண்டிய விடயமாகும். இந்த போக்கு இலங்கை, மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது இந்தியாவிலும் வளரக்கூடும்.

தெற்காசியாவின் இந்த முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, அரசியல் உயரடுக்குகளும் கொள்கை வகுப்பாளர்களும் நம்பகத்தன்மையையும் நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, மக்களுக்கு நட்புறவான நடவடிக்கைகளைச் சரிசெய்து பின்பற்றிக் கொள்ள வேண்டும். இப்போது அடுத்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு அடுத்த தலைமுறைக்கு கவனம் செலுத்தி, இளைஞர்களின் ஆற்றலையும் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தெற்காசியாவில் மீண்டும் இதே நிலை ஏற்படாது. இது அதன் அரசியல் மற்றும் கொள்கை உயரடுக்கினர் இதைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்ள வேண்டிய நேரமாகும்.

ரியர் அட்மிரல் Y. N. ஜெயரத்ன (ஓய்வுநிலை) இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியும் தலைமை நீரியல் படவரைஞரும் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டுத் தலைமை நீரியல் படவரைஞருமாவார். ஓய்வுபெற்ற போது ஐக்கிய நாடுகள் சபையால் கடலுக்கடியில் உள்ள கேபிள்களுக்கான சர்வதேச ஆலோசகராகப் நியமிக்கப்பட்டதன் மூலமாக அவரது சேவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவரை ynjayarathna@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Factum என்பது ஆசிய – பசுபிக்கை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்