'வேட்டையன்' படத்தில் மறைந்த பிரபல பாடகரின் பாடல்?
8 புரட்டாசி 2024 ஞாயிறு 11:03 | பார்வைகள் : 994
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் மறைந்த பழம்பெரும் பாடகர் குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வீடியோ ஒன்றை லைக் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் ’வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ என்ற பாடலை பழம்பெரும் பாடகர் ஒருவர் பாடியுள்ளார், அவர் யார் என்பதை கண்டுபிடியுங்கள்? என்று கூறியுள்ளது.
இதற்கு கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் பலர் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியிருக்கலாம் என்று, ஒரு சிலர் மலேசியா வாசுதேவன் பாடியிருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். நாளை இந்த பாடல் வெளியாகும்போது தான் இந்த பாடலை பாடிய அந்த பிரமுகர் யார் என்பது தெரியவரும்.
ஏற்கனவே மறைந்த பவதாரணி குரல், ஏஐ டெக்னாலஜி மூலம் ‘கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பயன்படுத்தப்பட்டது போல் எஸ்பிபி அல்லது மலேசியா வாசுதேவன் குரல் 'வேட்டையன்’ படத்தின் பாடலுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.