எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடுகளே ஸ்டாலின் மீதான அதிருப்திக்கு காரணம்
8 புரட்டாசி 2024 ஞாயிறு 02:22 | பார்வைகள் : 864
முதல்வர் ஸ்டாலின் மீது 29 சதவீதத்தினர் அதிருப்தியாக உள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதற்கு காரணம் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர்கள் தான்,'' என, அக்கட்சி அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
நேற்று நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது:
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் முதல்வர் முதலீடுகள் தொடர்பாக பேசுவார். எதனையும் மூடி மறைக்கும் பழக்கம் தி.மு.க.,வுக்கு கிடையாது.
ஆசியாவே தமிழகத்தை திரும்பி பார்க்கும் வகையில் முதல் முறையாக விளையாட்டு போட்டி நடத்தி பெருமை சேர்த்துள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி. தி.மு.க., கூட்டணியில் மோதல் ஏற்படதா என சிலர் இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அப்படியே காத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். கூட்டணியில் எந்த மோதலும் இல்லை. இவ்வாறு பாரதி கூறினார்.
தி.மு.க.,வினரிடையே ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
கடந்த 2021ல் நடந்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களில் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். அதனால் தான், தமிழகத்தில் 54 சதவீதத்தினர் முதல்வர் நடவடிக்கையில் திருப்தியாக இருப்பதாக சொல்கின்றனர். 17 சதவீதத்தினர் ஓரளவு திருப்தியாக உள்ளனர். 29 சதவீதத்தினர் அதிருப்தியாக உள்ளனர். அந்த அதிருப்தியும் மாநகராட்சி கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர்கள் மீதுள்ள அதிருப்தி தானே தவிர, முதல்வர் மீதான அதிருப்தி அல்ல என ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.