Paristamil Navigation Paristamil advert login

ஹரியானாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி மூன்றாம் முறை!

ஹரியானாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி மூன்றாம் முறை!

9 ஐப்பசி 2024 புதன் 03:25 | பார்வைகள் : 820


அக். 9- கருத்து கணிப்புகள் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் மீண்டும் தோல்வியடைந்தன. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என, அவை கூறியிருந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது.

ஹரியானாவில், 1966ல் இருந்து நடந்த தேர்தல்களில் காங்கிரஸ், ஜனதா கட்சிகளே வென்று வந்தன. பஜன்லால், பன்சி லால், தேவிலால் ஆகிய மூன்று லால்களுக்குப் பின், ஓம் பிரகாஷ் சவுதாலா வென்று வந்தார்.

ஜாதி அரசியலுக்கு சிறந்த உதாரணமாக கூறப்படும் ஹரியானாவில், 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து, 2019ல் ஆட்சியை தக்க வைத்தது.

ஜாதி அரசியல் மற்றும் விவசாயிகள் போராட்டம் போன்றவை, ஆட்சிக்கு எதிரான மனநிலையை உருவாக்கின. இதையடுத்து கடந்த, ஏப்., - மே மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாரை பா.ஜ., மாற்றியது. நயாப் சிங் சைனி முதல்வரானார். லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 1-0 இடங்களில், ஐந்தில் மட்டுமே பா.ஜ., வென்றது.

காங்கிரஸ் ஐந்து இடங்களை வென்றது. லோக்சபா தேர்தலில் நாடு முழுதும், முந்தைய தேர்தலைவிட அதிக இடங்களில் காங்கிரஸ் வென்றது. இதையடுத்து, அக்கட்சி மிகுந்த உற்சாகத்துடன் இருந்தது.

இந்நிலையில், 90 தொகுதிகள் உள்ள ஹரியானா சட்டசபைக்கு, 5ம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கணிப்புகள், காங்கிரஸ் அபார வெற்றியைப் பெறும் என்று தெரிவித்தன.

இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. காலை 8:00 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கையில், முதல் இரண்டு மணி நேரம் வரை, காங்கிரசே முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து காங்கிரஸ் அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக, நிலைமை தலைகீழாக மாறியது. பா.ஜ., முன்னிலை பெறத் துவங்கியது. இறுதியில், பெரும்பான்மைக்கு, 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ., 48 இடங்களில் வென்றது. காங்கிரஸ், 37 இடங்களில் வென்றது. இந்திய தேசிய லோக் தளம், இரண்டு இடங்களிலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வென்றனர்.

மாநில கட்சிகளான இந்திய தேசிய லோக் தளம், அதில் இருந்து பிரிந்த ஜே.ஜே.பி., எனப்படும் ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவை பின்னுக்கு தள்ளப்பட்டன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்