இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி - இந்தியா சாதனை
1 ஐப்பசி 2024 செவ்வாய் 09:28 | பார்வைகள் : 770
இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதனை மேல் சாதனை படைத்து அசத்தியுள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.
மழை குறுக்கீடு காரணமாக ஆட்டத்தின் முதல் நாளில் இடை நிறுத்தப்பட்ட நிலையில், முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பு 107 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
இதையடுத்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டமும் மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் வங்கதேச அணி 233 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கியது.
தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ஓட்டமும், ரோகித் சர்மா 11 பந்துகளில் 23 ஓட்டமும் குவித்து எதிரணியை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
பின்னர் வந்து சுப்மன் கில் (39), விராட் கோலி(47), ராகுல் (68) என குறைந்த பந்துகளில் ஓட்டங்களை வேகமாக குவிக்க இந்திய அணி 34 ஓவர்களில் 285 ஓட்டங்கள் குவித்து இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் இந்த போட்டியில் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50, 100 மற்றும் 150 ஓட்டங்களை கடந்த அணி என்ற அடுக்கடுக்கான சாதனையை ஒரே போட்டியில் படைத்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி 3 ஓவர்களில் 50 ஓட்டமும், 10.1 ஓவர்களில் 100 ஓட்டமும், 18.2 ஓவரில் 150 ஓட்டமும் குவித்து இந்த சாதனையை படைத்துள்ளது.