சுதா கொங்கரா இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்?
8 ஆவணி 2024 வியாழன் 10:49 | பார்வைகள் : 821
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய ஐந்து படங்களும் வரிசையாக வெற்றியடைந்ததோடு மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தன. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
கூலி படத்தை தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2, பிரபாஸ் உடன் ஒரு படம், சூர்யா உடன் ரோலெக்ஸ், இரும்புக்கை மாயாவி என லோகேஷின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது. இயக்குனராக இவ்வளவு பிசியாக இருக்கும் லோகேஷுக்கு நடிப்பின் மீதும் சற்று ஆர்வம் இருப்பதை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். அவரை முதன்முதலில் திரையில் தோன்ற வைத்தது நடிகர் விஜய் தான், அவர் நடித்த மாஸ்டர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்
இதைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் கெளரவ வேடத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்திருந்தார். அதன்பின்னர் அண்மையில் கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக இனிமேல் என்கிற ஆல்பம் பாடலில் நடித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதில் லோகியின் நடிப்பை பார்த்து வியந்துபோன ரசிகர்கள், ஹீரோவுக்கு தேவையான பத்து பொறுத்தமும் பக்காவாக இருப்பதாக கூறி வந்தனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்த படியே லோகேஷுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். அந்த வகையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள புறநானூறு திரைப்படத்தில் நடிக்க லோகி கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. அப்படத்தில் முதலில், சூர்யா, துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்தது. பின்னர் இருவருமே விலகியதால் சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டானர். இந்த நிலையில், மற்றொரு ஹீரோவான துல்கர் சல்மானுக்கு பதில் லோகேஷை நடிக்க வைக்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.