அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கு.. மீண்டும் விசாரணை.
8 ஆவணி 2024 வியாழன் 03:03 | பார்வைகள் : 741
சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை
விடுவித்து, ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, மீண்டும் விசாரணை நடத்தவும், விசாரணையை தினமும் நடத்தி விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த சாத்துார் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 44.56 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.
அ.தி.மு.க., ஆட்சியில் 2011ல் தொடரப்பட்ட இவ்வழக்கை, ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, அமைச்சர் மனு
கொடுத்தார்.
அவர் குற்றம் செய்யவில்லை என, விசாரணை அதிகாரி இறுதி அறிக்கை அளித்தார். அதை ஏற்று, வழக்கில் இருந்து அமைச்சரையும், மனைவியையும் நீதிமன்றம் கடந்த ஆண்டு விடுவித்தது.இதே போன்று, 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலைக்கு எதிராக தொடரப்பட்ட 76.40 லட்சம் ரூபாய் சொத்து குவிப்பு வழக்கையும் அதே நீதிமன்றம் விசாரித்து, அவர்களை விடுவித்தது.
இரண்டு விடுவிப்பு உத்தரவுகளையும் மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.
இதே பாணியில் விடுவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி தொடர்பான வழக்குகளையும் அவர் விசாரணைக்கு எடுத்தார். விசாரணை முடிந்து, நேற்று தீர்ப்பு அளித்தார். அமைச்சர்களை விடுவித்து, ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து
உத்தரவிட்டார்.
அதிகார துஷ்பிரயோகம்
நீதிபதி கூறியதாவது:குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதற்கு உதவும் வகையில், மேல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதிகாரத்துக்கு வரும்போது, இப்படி ஒரு வழிமுறையை கையாள்கின்றனர். தங்கம் தென்னரசு வழக்கிலும், இதுதான் நடந்துள்ளது.
இருவரும் சொத்து குவித்ததாக, 10 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு துறை வாதாடியது. பின், 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருவரும் அமைச்சர் ஆனதும், லஞ்ச ஒழிப்பு துறை தானாக முன்வந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிதாக அளித்த முகாந்திரங்களை ஆராய்ந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதத்தை ஏற்று, இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்தது. அதன்படி நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கை என்பது, அதிகார துஷ்பிரயோகம் தான். குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கும் நோக்கத்துடனே அவர்களின் 'மேல் விசாரணை' வடிவமைக்கப்பட்டது. அரசு தரப்பில் தாக்கல் செய்த இரண்டு
அறிக்கைகளையும் ஒப்பிடும்போது, அதில் உள்ள முரண்பாடுகள் தெரியும்.
முந்தைய விசாரணை அதிகாரி, 26 லட்சம் ரூபாய் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார். மேல் விசாரணை நடத்திய அதிகாரி, எந்த ஆவண ஆதாரமும் இல்லாமல், இந்த வருமானத்தை இறுதி அறிக்கையில் சேர்த்துள்ளார்.
இரண்டில் எது உண்மை என்பதை, வழக்கு விசாரணையின்போது தான் பரிசோதிக்க வேண்டுமே தவிர, வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் கட்டத்தில் அல்ல.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, அதிகாரவரம்பை மீறியதன் வாயிலாக, சிறப்பு நீதிமன்றம் தவறு செய்துள்ளது. தீர்ப்பு எப்படி எழுதக் கூடாது என்பதற்கான, 'மாடல்' ஆக, சிறப்பு நீதிபதி திலகத்தின் உத்தரவு உள்ளது.
இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளுக்கு சமாதி கட்டுவதை உறுதி செய்ய, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்துள்ளனர்.
ஒரே நாளில் எப்படி?
ராமச்சந்திரன் வழக்கில், 2012 செப்டம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது; தங்கம் தென்னரசு வழக்கில், 2012 நவம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2016 பிப்ரவரி, மார்ச் 29ல், இருவர் தரப்பிலும் விடுவிப்பு கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2021 மே மாதம், இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 27ல், எழுத்துபூர்வ வாதங்களை இரு அமைச்சர்களும் தாக்கல் செய்கின்றனர். அதன் அடிப்படையில் மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறை, செப்டம்பர் 15ல் அனுமதி கேட்கிறது. அக்டோபர் 28ல் இரண்டு இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கும்போதே, திட்டமிட்டு நடத்தப்பட்டது தெரிகிறது.
குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரும் அதிகாரத்துக்கு வந்ததும், அவர்கள் வழக்கில் இருந்து வெளிவருவதற்கான வழியை கண்டுபிடிக்க, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்; அல்லது மேல் மட்டத்தில் இருந்து, அவர்களுக்கு கூறியிருக்கலாம். அதன்படி, ஒரே நாளில் எழுத்துபூர்வ வாதங்களையும், இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்கின்றனர். இதை சிறப்பு நீதிமன்றம் கவனிக்காமல் விட்டது துரதிருஷ்டவசமானது.
செப்., 9ல் ஆஜராகணும்
சட்டவிரோத அம்சங்கள் கொண்ட இந்த உத்தரவுகளில் தலையிடுவதை அரசியல் சாசன கடமையாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. நீதிமன்றங்கள் முன், அரசியல்வாதிகளும், சாதாரண நபரும் சமம் என்பது தான் சட்டத்தின் ஆட்சி.
எனவே, சிறப்பு நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, விசாரிக்க வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 9ல் ஆஜராக வேண்டும். வழக்கு, 2011ல் தொடரப்பட்டது என்பதால், தாமதம் தவிர்க்க தினமும் விசாரணை நடத்தி, விரைந்து முடிக்க வேண்டும்.
இங்கே வழக்கின் தகுதியை ஆராயவில்லை என்பதால், உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களுக்கு ஆட்படாமல், சிறப்பு நீதிமன்றம் தான் தகுதி அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.