நிலச்சரிவு குறித்து மத்திய அமைச்சர் பொய் குற்றச்சாட்டு: கேரள முதல்வர்
7 ஆவணி 2024 புதன் 03:19 | பார்வைகள் : 567
வயநாடு நிலச்சரிவுக்கு மலைப்பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புகள் மற்றும் சுரங்கங்களை அனுமதித்ததே காரணம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'கேரளாவின் வயநாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு உடைய பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புகள், சுரங்கங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அங்கு உள்ள மண் பரப்பு, தாவர அமைப்பு போன்ற முக்கிய சுற்றுச்சூழல் காரணிகளை அலட்சியம் செய்து, மனித வாழ்விடங்களை அனுமதித்ததே பேரழிவுக்கு வழிவகுத்தது' என்றார்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. கேரளாவின் மலைப் பகுதியைப் பற்றி சிறிதளவு அறிவும், புரிதலும் உள்ளவர்கள் கூட அங்கு வசிக்கும் மக்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூற மாட்டார்கள். கேரள அரசுக்கு எதிராக விஞ்ஞானிகள் உள்ளிட்டவர்களை திரட்ட மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறப்படும் செய்திகள், இவரது அறிக்கையின் வாயிலாக உண்மை தான் என்பது உறுதியாகிறது,” என்றார்.
கனமழை கணிப்பு: வானிலை மையம் தகவல்
'கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு முன்னதாக, இந்திய வானியை ஆய்வு மையம் கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் மட்டுமே விடுத்திருந்தது. ஆனால், எச்சரித்ததை விட மிக அதிகமாக வயநாட்டில் 57 செ.மீ., மழை பெய்தது' என, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நேற்று கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை முன்னெச்சரிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 30 - 40 சதவீதம் மேம்பட்டுள்ளது. அடுத்த ஐந்து முதல் ஏழாண்டுகளில், மேலும் 10 - 15 சதவீதம் மேம்படுத்தப்படும்.
தற்போதைய நிலவரப்படி, 24 மணி நேரத்திற்கு முன்னதாக கடும் மழைப் பொழிவை 80 முதல் 90 சதவீதம் வரையிலும் துல்லியமாக கணிக்கிறோம். ஐந்து நாட்களுக்கு முன் 60 சதவீதம் வரையிலும் துல்லிய கணிப்பை வழங்குகிறோம். இதை பயன்படுத்தி, கனமழை காலங்களில் பெருத்த உயிர் மற்றும் பொருள் சேதங்களை முடிந்தவரை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பலவீனமான மலைப் பகுதிகளில் சுரங்கங்கள் தோண்டியதும், வனப்பகுதிகள் குறைந்து வருவதும், நீண்ட நேர மழை பொழிவுமே வயநாடு நிலச்சரிவுக்கு முக்கிய காரணங்களாக விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.