வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது
6 ஆவணி 2024 செவ்வாய் 13:41 | பார்வைகள் : 799
வங்கதேசத்தில் ஒரு மாதமாக நடந்த மாணவர் போராட்டங்களில், 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். நாட்டை விட்டு வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சமடைய உள்ளார். இந்நிலையில், அங்கு ராணுவ ஆட்சி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இடைக்கால அரசை அமைக்கவுள்ளதாக வங்கதேச ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போராட்டத்தின் போது உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகளுக்கு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தத் துவங்கினர்.கடந்த ஜூலையில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, பாகுபாடுக்கு எதிரான மாணவர் அமைப்பு என்ற பெயரில், மாணவர்கள் இரு நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தினர். அப்போது நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி, ஒத்துழையாமை போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். அது, மாணவர் அமைப்பினருக்கும், ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கும் இடையேயான நாடு முழுவதுமான மோதலாக மாறியது. இந்த வன்முறையில், நேற்று முன்தினம் மட்டும், 1-00க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; பல நுாறு பேர் காயம்அடைந்தனர். இது, மாணவர் அமைப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நேற்று காலையில், மாணவர்கள், தலைநகர் டாக்காவை நோக்கி பயணிக்கும் போராட்டத்தை துவக்கினர். இதில் நடந்த வன்முறையில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவம் தலையிட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி, ஷேக் ஹசீனாவுக்கு, ராணுவ தளபதி ஜெனரல் வகார் உஜ் ஜமான், நேற்று காலை, 45 நிமிட கெடு விதித்தார். இதைத் தொடர்ந்து, பதவியில் இருந்து விலகுவதாக ஷேக் ஹசீனா அறிவித்தார். தன் அரசு இல்லமான கணபவனில் இருந்து, தன் சகோதரியுடன் அவர் வெளியேறினார்.
அந்த நாட்டின் விமானப் படையின் ஹெலிகாப்டர் வாயிலாக, அவர் நம் நாட்டின் உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் அடைக்கலம் கேட்டு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, இன்று அவர் லண்டனுக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தின் பிரதமராக ஐந்து முறை பதவி வகித்தவர், ஷேக் ஹசீனா, 76. வங்கதேசம் உருவாவதற்கு காரணமான, வங்கதேசத் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபர் ரஹ்மானின் மகள் இவர்.ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகிய செய்தியை, ராணுவ தளபதி ஜெனரல் வகார் உஜ் ஜமான், 'டிவி'யில் நேற்று அறிவித்தார்.
வலியுறுத்தல்
எதிர்க்கட்சிகளுடன் பேசியுள்ளதாகவும், இடைக்கால அரசை அமைக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபடும் என்றும் அவர் அறிவித்தார். போராட்டங்களை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டாக்காவை நோக்கி பேரணி என்ற போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவும், மொபைல் இணைய சேவையும் ரத்து செய்யப்பட்டிருந்தது. ராணுவ தளபதியின் அறிவிப்பைத் தொடர்ந்து, இணைய சேவை உடனடியாக வழங்கப்பட்டது. 'டிவி'யில் அவருடைய உரையைக் கேட்ட போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்து, ஹசீனாவின் படுக்கையறை உட்பட பல அறைகளிலும் இருந்த நாற்காலி, சோபா என பல பொருட்களை சூறையாடியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின. சாலைகளில் குவிந்த மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.சமையல் அறையிலிருந்த உணவுகளை எடுத்து சிலர் ருசி பார்த்தனர். மேலும் சிலர், அங்கிருந்த முயல், நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை துாக்கிச் சென்றனர். டாக்காவில் இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை அவர்களை உடைத்தெறிந்தனர். அவாமி லீக் கட்சியின் அலுவலகத்தையும், போராட்டக்காரர்கள் சூறையாடினர். உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானின் வீட்டுக்கு தீ வைத்தனர்.
இதற்கிடையே, ராணுவம் நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ராணுவ வீரர்களும், போலீசாரும், நாடு முழுதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இக்கலவர தினம், இலங்கையில் 2022 நடந்த, கிளர்ச்சியாளர்களின் ஜனாதிபதி மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நினைவுபடுத்தியது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேயின் வீட்டை, கிளர்ச்சியாளர்கள் சூறையாடிய நிகழ்வை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
பிரதமர் மோடி அவசர ஆலோசனை
ஷேக் ஹசீனா, டில்லியை அடுத்துள்ள உத்தர பிரதேசத்தின் ஹிண்டன் விமான நிலையத்துக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தார். அவரை, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து வங்கதேச நிலவரம் தொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். பார்லிமென்ட் வளாகத்தில் ஜெய்சங்கரிடம், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், வங்கதேச நிலவரம் குறித்துகேட்டறிந்தார். நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவையின் பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம் நடந்தது. இதில் வங்கதேச விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையே, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனராக, டில்லியில் பணியாற்றும் தன் மகள் சைமா வாசெத்தை, ஷேக் ஹசீனா சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, மத்திய அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அங்குள்ள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
போராட்டம் முதல் வெளியேற்றம் வரை...
2024, ஜூன் 5
வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 ச--தவீத இடஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் மீண்டும் அமல்படுத்தியது.
ஜூன் 7மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜூலை 1போராட்டத்தால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியது.
ஜூலை 15போராட்ட மாணவர்களை தேச துரோகிகள் என்றார் ஹசீனா. போராட்டம் தீவிரம் அடைந்தது. டாக்கா பல்கலை மாணவர்கள் ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜூலை 16ஆறு மாணவர்கள் பலி.
ஜூலை 21இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மாணவர்கள் ஏற்க மறுத்தனர். போராட்டம் தீவிரமடைந்தது.
ஜூலை 27போராட்டத்தில் ஈடுபட்ட நுாற்றுக்கணக்கான மாணவர்கள் கைது.
ஆக., 1ஜமாத் - இ - இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பான ஜமாத் ஷிபிர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது.
ஆக., 4போராட்டம் கலவரமாக வெடித்தது. 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
ஆக., 5நெருக்கடி அதிகரித்ததும், நாட்டை விட்டு வெளியேறினார் ஹசீனா