பான் விபரமின்றி லட்சக்கணக்கில் டிபாசிட் : செந்தில் பாலாஜி வழக்கில் ஈ.டி., அதிர்ச்சி தகவல்
6 ஆவணி 2024 செவ்வாய் 02:25 | பார்வைகள் : 676
செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் பான் விபரமின்றி லட்சக்கணக்கான ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது' என, அமலாக்கத் துறையினர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு அவரது தரப்பில் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மறுப்பு
இதில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன் வழக்கை ஒத்திவைக்க அனுமதி கோரினார். இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
அப்போது, செந்தில்பாலாஜி வீட்டில் இருந்து முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில ஆவணங்கள், கண்டக்டர் வேலைக்காக, 14.2 கோடி ரூபாய் வரை வசூலித்ததை காட்டுகின்றன. ஒவ்வொரு பணியிடமும் விற்கப்பட்டுள்ளன. சில ஆவணங்களில் அமைச்சர் என்பதை, ஏ.ஆர்., என்றும், கண்டக்டர் என்பதை, சி.ஆர்., என்றும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.
நிறைய வித்தியாசம்
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ள மொத்த விவசாய வருமானத்துக்கும், தற்போது அவர் வருமான வரித் துறையிடம் தெரிவித்த வருமானத்துக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.
பான் எண், முகவரி உட்பட எந்த விபரமும் இன்றி லட்சக்கணக்கான ரூபாய், செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. வங்கி சலானிலும், எந்த விபரமும் இல்லை.
கண்டக்டர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் வாரியத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டாலும், இது தொடர்பாக அவருக்கு முறையாக இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.