Paristamil Navigation Paristamil advert login

புகைப்படங்கள் கடந்த கால நினைவுகள்...!

புகைப்படங்கள் கடந்த கால நினைவுகள்...!

1 புரட்டாசி 2024 ஞாயிறு 10:57 | பார்வைகள் : 573


புகைப்படம் (Photo)  எடுப்பதென்றால், எப்பொழுதுமே  எங்களுக்கு ஒரு தனிப் பிரியம் தான்..

இந்த உலகில் நாம் வாழும், வாழ்ந்த காலங்களை என்றென்றும் நினைவுபடுத்துபவை  புகைப்படங்கள் தான்..

பிறந்த நாள் கொண்டாடுகின்றோம் என்பதன் மறைமுகமான அர்த்தம், எமது வாழ்வில் ஒரு வருடம் அதிகரித்துள்ளது என்பதாகும். வருடங்கள் கழிந்தாலும் கடந்து வந்த காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் கடந்து வந்த காலத்தினை நினைவுபடுத்துவதுடன் எம்மை எப்பொழுதும் இளமையாக வைத்துள்ளது.  

அந்த புகைப்படங்களை நிகழ்காலத்தில் பார்க்கும் பொழுது, நாம் அந்த காலத்திற்கே சென்று விடுவதானதொரு புத்துணர்ச்சி  எம் மனதில்  ஏற்படுத்துகின்றதல்லவா!

கவிஞர் வைரமுத்துவின் கருத்தாழமிக்க கவிதை " முன்னோக்கி எனை நடத்தி முதுமை செய்யும் காலங்காள் பின்னோக்கி எனை நடத்தி பிள்ளையாக்கக் கூடாதா..” என்பதாகும். எமது பழைய புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது இந்த வரிகள் தான் எமது சிந்தையை தட்டிச் செல்கின்றன. எமது வாழ்க்கையிலேற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களையும், துயரமான  சம்பவங்களையும் நம் கண்முன் கொண்டு வந்து காட்டும் அவைகள்  காலத்தின் பொக்கிஷங்கள்.

புகைப்படம் என்பது தனியே ஒரு படம் அல்ல . அது புகைப்படவியலாளர்களின் திறமையை வெளிப்படுத்துகின்ற ஓர் உன்னதமான கலை. 

பிரசித்திப் பெற்ற புகைப்படவியலாளர்கள் தமது படங்களின் மூலம் பல கருத்துக்களை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் விதமாக எடுப்பது அவர்களது கைவந்த கலை.

ஆகஸ்ட் 19 "உலக புகைப்பட தினமாகும்".  

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், Louis Daguerre, Joseph Nicephore Niepee ஆகிய இருவரும், "daguerreotype process " எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தனர்.

1839 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி 'French Academy of Sciences'  இம் முறைக்கு அங்கீகாரம் அளித்தது.

1839-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அரசு, ஆகஸ்ட் 19-ம் தேதி டாகுரியோடைப் செயல்பாட்டை உலக மக்கள் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தது. 

அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு வருடமும் இத்தினம் உலகப் புகைப்படத் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

புகைப்படக்கலையில் முன்னோடியான நாடாகக் கருதப்படுவது பிரான்சு தேசமாகும்.

அதே ஆண்டு பிரித்தானிய  விஞ்ஞானியான Sir John Herschel  என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையினை கண்டுபிடித்தார் .

இவ்வாறான கலைக்கு 'போட்டோகிரபி' எனப் பெயரிட்டவரும்  இவரே !

கேமரா அப்ஸ்குரா, நெகட்டிவ் முறை, சில்வர் காப்பர் பிளேட், பேப்பர் பிலிம், டிஜிட்டல் கேமரா, ஸ்மார்ட்போன் என புகைப்படக்கலையில் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் இன்று ஏற்பட்டுள்ளன.

பாரம்பரிய புகைப்படக் கலையிலிருந்து வர்த்தக ரீதியிலான புகைப்படக் கலை  முறைக்கு முதன் முதலாக மாற்றிய நிறுவனம் கொடெக் ஆகும்.

இந்நிறுவனம் தனது சந்தைப்படுத்தல் நுட்பமாகப் பயன்படுத்திய வாசகம் தான்,  "பொத்தானை  அழுத்துங்கள். மிகுதியை நாங்கள் செயல்படுத்துகின்றோம்", என்பதாகும்.

மிகச் சிறந்த புகைப்படக் கலைக்குப் பெயர் பெற்ற நாடு பெரு (Peru) ஆகும்.

எமது முன்னோர்கள் அக்காலங்களில் கருப்பு வெள்ளை நிறத்திலான புகைப்படங்களை எடுத்து, அவற்றை அழகாக கண்ணாடிச் சட்டத்தினுள் பொருத்தி, வீடுகளில் மாட்டி விடுவதானது இன்றும் எம் மனக்கண் முன் நிற்கின்றது.

இன்றும் பலரது வீடுகளில் கறை படிந்த கண்ணாடிக்குள், கரையான் அரித்த அட்டையில் ஒட்டியிருக்கும் படங்களைப் பார்க்கும் பொழுது , எமது மூதாதையர்களின்  மறக்க முடியாத வாழ்க்கை நினைவுகளை, அவைகள்   அசை போட வைக்கின்றதென்றால் அது மிகையாகாது.காலம் வேகமாக சுழன்று கொண்டிருக்கின்றது.

கால ஓட்ட மாறுபாட்டிற்கேற்ப நாமும் இன்றைய காலகட்டத்தில் புகைப்பட கலைஞர்கள் தான் . 

இன்று பல்வேறு விதமான படங்களை நாங்கள் எங்களது கையடக்கத் தொலைபேசியில் (மொபைல் போனில்) எடுக்கின்றோம். 

ஆனால், சிறந்த புகைப்படங்களாகக் காணப்படுபவை தொழில் சார்ந்த புகைப்படவியலாளர்களால் எடுக்கப்படுகின்ற புகைப்படங்களே ஆகும்.

புகைப்படத் துறையில் ஆர்வம் காட்டவும், மக்களை ஊக்குவிக்கவும் உலகப் புகைப்படத் தினம் முக்கியமானது.

ஆயிரம் வார்த்தைகளைப் பயன்படுத்தி சொல்லப்படுகின்ற ஒரு விடயத்தை தங்களது ஒவ்வொரு புகைப்படத்தின் மூலமாக அவர்கள் உலகிற்கு தெளிவாக விளக்கி விடுகின்றனர்.

அதனால் தான், புகைப்படங்களை சிறந்த 'செய்திக் கடத்தி' எனக் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய உலகில், மத்திய தர வர்க்கத்தினர் உட்பட அணைவரும் இக்கருவியைப் பயன்படுத்தக் கூடிய நிலையிலுள்ளனர்.

உலக சரித்திரத்தையே மாற்றி அமைத்த புகைப்படங்களாக 1989 ஆம் ஆண்டு  ஜூன்  மாதம் ஐந்தாம் திகதி சீன வீரர்களின் பீரங்கிகளை எதிர்த்து நின்ற   "Tank Man"  புகைப்படம் , வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம் , போபாலின் விஷவாயு தாக்கிய சிறுமியின் புகைப்படம்,  ஹிரோஷிமா நாகசாகி வெடிகுண்டு புகைப்படம் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

இன்றைய தினத்தில் போர் சூழ்ந்துள்ள இடங்களில் தமது உயிரையே துச்சமாக மதித்து புகைப்படங்கள் எடுப்பவர்களையும், மற்றும் வனாந்தரங்களில் , பாலைவனங்களில் , சமுத்திரங்களில், ஆகாயத்தில்,  புகைப்படம் எடுக்கும் அனைவரையும் நினைவு கூர்ந்து அவர்களுடைய அளப்பரிய சேவையை பாராட்டுவதும் அவசியமாகும்.

அனைவருக்கும் உலகப்  புகைப்படத் தின நல்வாழ்த்துக்கள்.


நன்றி வீரகேசரி
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்