பெண்களுக்கு கால்சியம் அளவு குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
2 ஆவணி 2024 வெள்ளி 13:52 | பார்வைகள் : 950
வலுவான எலும்புகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய கால்சியம் சத்து, நம் நினைப்பதை விட பல உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாததாக உள்ளது. பெண்கள், குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நின்றவர்கள், குறைந்த கால்சியம் அளவுகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம் நீங்களும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரா என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
ஆண்களை விட பெண்கள் கால்சியம் குறைபாட்டால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முதன்மை காரணம் ஹார்மோன் வேறுபாடுகளே, முக்கியமாக ஈஸ்ட்ரோஜனின் பங்கு இதில் அதிகமுள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்..
மெனோபாஸ் சமயத்தில், பெண்கள் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் குறிப்பிடத்தக்க சரிவை அனுபவிக்கிறார்கள். இது எலும்புப்புரை மற்றும் குறைந்த கால்சியம் அளவை அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது. கூடுதலாக, உணவுப் பழக்கம், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் ஆகியவை ஆண்களை விட பெண்களின் கால்சியம் அளவை கணிசமாக பாதிக்கிறது.
குறைந்த கால்சியம் அளவுகள் அல்லது ஹைபோகால்சீமியா பல்வேறு அறிகுறிகளுடன் இருக்கலாம். அவை ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் இன்றி நுட்பமானதாக இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆகையால் உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் தீவிரமானதாக மாறும்.
சில பொதுவான எச்சரிக்கை அறிகுறிகள்:
தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்கு: இவை பெரும்பாலும் முதுகு மற்றும் கால்களில் ஏற்படுகின்றன. கூடவே தசை வலிகளும் இருக்கும்.
உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு: பொதுவாக கைகள், கால்கள் மற்றும் வாயைச் சுற்றி ஏற்படும். நரம்பு மண்டலத்தின் அதிகரித்த உற்சாகத்தின் காரணமாக இந்த உணர்வு ஏற்படுகிறது.
சோர்வு: தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனமாக உணர்வது குறைந்த கால்சியம் அளவு இருப்பதைக் குறிக்கலாம்.
வறண்ட தோல் மற்றும் எளிதில் உடையக்கூடிய நகங்கள்: தோல் மற்றும் நகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க கால்சியம் அவசியம் ஆகும். எனவே கால்சியம் குறைபாடுகள் பெரும்பாலும் சரும பிரச்சினைகளாக வெளிப்படுகின்றன.
பல் பிரச்சனைகள்: ஹைபோகால்சீமியா பல் சிதைவு மற்றும் ஈறு அழற்சி நோய்க்கு வழிவகுக்கும்.
மனநிலை மாற்றங்கள்: கால்சியம் அளவுகள் போதுமானதாக இல்லை என்றால் நரம்பியல்கடத்தியின் செயல்பாட்டை பாதித்து, பதட்டம், மனச்சோர்வு மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.
இதய நோய் அறிகுறிகள்: கால்சியம் குறைபாடு அதிகமாக இருந்தால் சீரற்ற இதயத் துடிப்புகள் மற்றும் அரிதான சமயங்களில் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
பால், சீஸ் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள், அத்துடன் பச்சை இலை காய்கறிகள், பாதாம், தானியங்கள் மற்றும் ஆரஞ்சு சாறு போன்ற கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகள் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் கால்சியம் மாத்திரைகள் சிறந்த பலனைத் தரும். சூரிய ஒளி உடலில் படுமாறு நிற்பது மற்றும் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் ஆகியவையும் கால்சியம் அளவுகளை பராமரிக்க உதவும்.