நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா?
25 ஆடி 2024 வியாழன் 14:49 | பார்வைகள் : 782
மகிழ்ச்சியற்ற உணர்வை நாம் அனைவருமே சில நேரங்களில் அனுபவிக்க வேண்டியிருக்கும். பெரும்பாலும் நம் வாழ்வில் பல்வேறு காரணிகளால் நமக்கு மகிழ்ச்சியில்லா சூழல் ஏற்படுகிறது. இந்தக் காரணங்களை சரியாக புரிந்துகொள்வதன் மூலம், நேர்மறையான மாற்றங்களைச் செய்து, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழ நம்மால் முடியும். இந்தக் கட்டுரையில் மகிழ்ச்சியின்மைக்கான பொதுவான காரணங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதில் வரக்கூடிய சவால்களை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி தெளிவாக பார்ப்போம்.
அடுத்தவர்களை மகிழ்விப்பவராக இருப்பது மகிழ்ச்சியின்மைக்கு வழிவகுக்கும், ஏனெனில் இது உங்கள் சொந்த நலனை விட மற்றவர்களின் கவனம் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கும். மற்றவர்களிடமிருந்து தொடர்ச்சியாக கவனத்தைக் கோர விரும்புவது உங்கள் சொந்த தேவைகளையும் விருப்பங்களையும் புறக்கணிப்பதற்கு ஈடாகும். இதனால் அதிருப்தி, மனக்கசப்பு மற்றும் மோதல் போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். அடுத்தவர்களிடம் ‘இல்லை’ ‘வேண்டாம்’ என்று கூறப் பழகுங்கள். உங்களைச் சுற்றி எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் சொந்த மகிழ்ச்சி மற்றும் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் தொழில் மற்றும் கேரியரில் நீங்கள் சிறந்து விளங்கலாம். ஆனால் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் செலவிடும் நேரத்தை புறக்கணித்தால், நீங்கள் குறிப்பிடத்தக்க மன மற்றும் உணர்வு ரீதியான துயரங்களை அனுபவிக்க நேரிடும். அதிகப்படியாக வேலை செய்வது மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
உங்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதே நேரத்தில், வீட்டிற்கு வந்தும் அலுவலக வேலைகள் செய்வதை தவிர்க்கவும். உங்களுக்கு மகிழ்ச்சியையும் தளர்வையும் தரும் செயல்களில் ஈடுபடுங்கள்.
ஒவ்வொரு தனிநபரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகள், தனிப்பட்ட நலன்கள் இருக்கும். தொடர்ந்து உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது, உங்கள் சுயமரியாதையை பலவீனப்படுத்தி, மகிழ்ச்சியற்ற உணர்வுகளை அதிகரிக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் சமூக அழுத்தங்கள் பெரும்பாலும் இந்த போக்கை அதிகரிக்த்து, நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை வளர்ப்பதோடு ஒருவரின் சுய மதிப்புற்கு தீங்கு விளைவிக்கும்.
உங்களின் சொந்த சாதனைகள், உங்களின் பலம் என்ன என்பது குறித்து நினைத்துப் பாருங்கள். அடுத்தவர்களோடு ஒப்பிடுவதை விட உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை சோசியல் மீடியாவை தவிர்ப்பது நல்லது.
எப்போதும் நேர்மறையான அணுகுமுறையை பராமரிப்பது அவசியமாகும். உங்களிடம் இல்லாததை நினைத்து வருத்தப்படுவதை விட உங்களிடம் உள்ளதைப் பாராட்டுவதில் கவனம் செலுத்துங்கள். நன்றியுணர்வு மற்றும் பணிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்களின் பலம், உறவுகள் மற்றும் அனுபவங்களைப் பாராட்டுவதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையின் சிறிய சந்தோஷங்களை மகிழ்ச்சியாக தழுவிக்கொள்ளுங்கள்.
நச்சுத்தன்மை எண்ணம் கொண்ட நபர்களால் நீங்கள் சூழப்பட்டிருந்தால், அது உங்களின் ஆற்றலை, சுயமரியாதையைக் குறைத்து உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கலாம். ஒருவரை ஏமாற்றுவது, விமர்சிப்பது அல்லது தொடர்ந்து எதிர்மறையான நடத்தை ஆகியவை அனைத்தும் டாக்ஸிக் உறவில் இருக்கும். இவை அனைத்தும் உங்களின் மன அழுத்தம் மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கு பங்களிக்கின்றன.
உங்கள் மகிழ்ச்சியையும் சுய மதிப்பையும் தொடர்ந்து நாசப்படுத்தும் நபர்களிடமிருந்து எப்போதும் விலகியே இருங்கள். பரஸ்பர மரியாதை மற்றும் ஆதரவின் அடிப்படையில் உறவுகளுடன் பழகுங்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு சாதகமாக பங்களிப்புச் செய்யும் நட்புகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.