காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 19 வயது இளைஞன் பலி..!
11 ஆனி 2024 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 3345
வீதி கட்டுப்பாட்டை மீறி பயணித்த இளைஞன் ஒருவர், காவல்துறையினரால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் வடக்குப் பகுதியான Cherbourg (Manche) இல் இடம்பெற்றுள்ளது. முற்பகல் 11.20 மணி அளவில் Cherbourg-en-Cotentin நகர் நோக்கி பயணிக்கும் சாலை ஒன்றில் அதிவேகமாக பயணித்த மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் மகிழுந்து சாரதி கட்டுப்பாட்டை மதிக்காமல், தொடர்ந்து பயணித்துள்ளார்.
மகிழுந்துக்குள் நால்வர் இருந்ததாகவும், அது திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்துக்குள் இருந்த சாரதி துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்ய முற்பட்டபோது, அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்துக்குள் இருந்த ஏனைய மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.