Paristamil Navigation Paristamil advert login

பா.ஜனதாவின் அடுத்த தலைவர் யார்? பரபரப்பு தகவல்கள்

பா.ஜனதாவின் அடுத்த தலைவர் யார்? பரபரப்பு தகவல்கள்

11 ஆனி 2024 செவ்வாய் 05:09 | பார்வைகள் : 928


பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் அனைவரும் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்று இருப்பதால், கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்கிற கேள்வி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்று 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார். அவரோடு 71 மந்திரிகளும் பதவியேற்று உள்ளனர்.

பதவியேற்ற மந்திரிகளில் பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் இடம் பெற்று உள்ளனர். ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மட்டுமல்லாது கட்சியின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி.நட்டாவும் மந்திரியாகி உள்ளார். அது மட்டுமல்ல, கட்சியின் அடுத்த தலைமை முகமாக பார்க்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பூபேந்திர யாதவ், சி.ஆர்.பாட்டீல் ஆகிய முன்னணி தலைவர்களும் மந்திரிகளாகி விட்டனர்.

பா,ஜனதாவைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்கிற சூத்திரமே பொதுவாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் ஜே.பி.நட்டாவிடம் இருந்து கட்சியின் தேசிய தலைவர் பதவி மாற்றப்படும் என தெரிகிறது. ஏற்கனவே அவரது தலைவர் பதவிக்காலம் முடிவடைந்துதான் இருந்தது. தேர்தலுக்காக நீட்டித்துக் கொடுத்திருந்தனர்.

இதனால் கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டியது அவசியமாகி இருக்கிறது. புதிதாக யாரை நியமிப்பார்கள்? என கேள்வி எழுந்திருக்கிறது. இருக்கிற மூத்தவர்கள் அனைவரும் மந்திரிகளாகி இருப்பதால் தேசிய தலைவர் பதவி யாருக்கு போகும்? என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதுள்ள நிலையில் முக்கியமான சிலரை கட்சியின் டெல்லி வட்டாரங்கள் குறிப்பிட்டன. அதில் சுனில் பன்சால், வினோத் தாவ்டே, அனுராக்சிங் தாக்குர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சுனில் பன்சால் கட்சியின் வேகமான செயல்வீரராக பார்க்கப்படுகிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவருக்கு 54 வயது ஆகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த இவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பொதுச்செயலாளர் ஆக்கியதுடன் மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும் ஆக்கினர்.

இவருக்கு தலைவர் பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இவருக்கு ஈடாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டேயும் பார்க்கப்படுகிறார். வினோத் தாவ்டே மராட்டியத்தைச் சேர்ந்தவர். 60 வயது ஆகிறது.

பொதுத்தேர்தல்களில் மக்களை கவரும் யுக்திகளை அமைப்பதில் வல்லவர் என கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த ஆண்டின் இறுதியில் மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. மராட்டியத்தை பா.ஜனதா தீவிரமாக பார்ப்பதால் இவருக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக அனுராக்சிங் தாக்குர் பேசப்படுகிறார். இமாசலபிரதேச முன்னாள் முதல்-மந்திரியின் மகனான இவர் அங்குள்ள ஹமிர்புர் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று எம்.பி. ஆனவர். ஏற்கனவே மத்திய மந்திரி ஆனவர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.

இமாசலபிரதேசத்தைச் சேர்ந்த ஜே.பி.நட்டாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளதால் இவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

தலைவர் போட்டியில் இருக்கும் மற்றொருவர் ஓம் பிர்லா. 17-வது மக்களவையை நடத்திய சபாநாயகர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மந்திரிசபையில் பொறுப்பேற்கவில்லை. எனவே தேசிய தலைவராக வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த 4 பேரில் யாராவது ஒருவருக்கு தேசிய தலைவர் பதவி வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தாலும், பா.ஜனதாவைப் பொறுத்தவரை யாருமே யூகிக்காத ஒருவரை பிரகடனப்படுத்தி ஆச்சரியப்பட வைப்பதையும் ஒரு பாணியாக வைத்துள்ளது என்பதையும் மறக்க வேண்டாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்