’கருடன்’ படம் தொடர்பில் மனம் திறந்த சூரி!
15 ஆனி 2024 சனி 15:29 | பார்வைகள் : 1424
’கருடன்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பு இந்தப் படம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததாக நடிகர் சூரி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிப்பில் ‘கருடன்’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு நிதிநெருக்கடி இருந்தததாகவும் படத்தின் ரிசல்ட் பற்றி தெரிந்து கொள்ள பதட்டமாக இருந்தேன் என்றும் சூரி நேற்று நடந்த வெற்றி விழாவில் பேசியிருக்கிறார்.
அதில், “ஒரு படத்திற்கு கதையை தயார் செய்து யார் வேண்டுமானாலும் படப்பிடிப்புக்கு சென்று விடலாம். படப்பிடிப்பை நிறைவு செய்து விடலாம். கஷ்டப்பட்டு படத்தை வெளியிடவும் செய்யலாம். படம் வெளியான பிறகு இதுபோன்றதொரு மேடை கிடைப்பது கடினம். அந்த வகையில் நான் கதையின் நாயகனாக நடித்த இரண்டு படத்திற்கும் இத்தகைய மேடைக்கு வந்து விட்டேன். அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட போது நான் என்னுடைய அலுவலகத்தில் இருந்தேன். மிகுந்த பதட்டத்துடன் இருந்தேன். பத்திரிக்கையாளர்களின் விமர்சனம் எப்படி இருக்கும் என்ற தவிப்பில் இருந்தேன். படத்தின் இடைவேளையின் போது போன் செய்து படம் நன்றாக இருக்கிறது என தகவல் சொன்னார்கள்.
படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட நிதி சார்ந்த சிக்கல்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய வாழ்க்கையில் 'விடுதலை'க்கு முன், 'விடுதலை'க்குப் பின் என்ற நிலையை ஏற்படுத்திய வெற்றிமாறனுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
இயக்குநர் செந்திலுடன் பதினான்கு ஆண்டு காலம் பழகி இருக்கிறேன். அவர் ஒருபோதும் பணத்திற்கு ஆசைப்படாமல் என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். பணத்திற்காக என்னை எங்கேயும் விட்டுக் கொடுக்காமல் இதுவரை அழைத்து வந்திருக்கிறார்.
வெற்றிமாறனிடம் கதையின் நாயகனாக என்னை ஒப்படைத்த பிறகும், தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு தான் இந்த 'கருடன்'. இன்று ஒரு வெற்றி படமாக அமைத்துக் கொடுத்ததற்காகவும் தயாரிப்பாளர் குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெளியீட்டு தருணத்தில் உதவிய விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி ''என்றார்.