Paristamil Navigation Paristamil advert login

ஒடிசாவில் பாண்டியன்தான் ஆட்சி நடத்துகிறார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஒடிசாவில் பாண்டியன்தான் ஆட்சி நடத்துகிறார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

29 சித்திரை 2024 திங்கள் 00:59 | பார்வைகள் : 610


ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. எனவே அங்கு பிரசாரம் களைகட்டியுள்ளது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் செய்தார். கட்டாக்கின் சலேபூரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர் மத்திய-மாநில அரசுகளை கடுமையாக சாடினார்.

குறிப்பாக மாநில அரசில், முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் உதவியாளராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனின் தலையீடு குறித்து பேசினார்.

இதுதொடர்பாக தனது உரையில் ராகுல்காந்தி கூறுகையில், "ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதாதளமும், பா.ஜனதாவும் ஒன்றையொன்று எதிர்த்து தேர்தலில் களமிறங்கி உள்ளன. ஆனால் உண்மை என்னவென்றால் அவை இணைந்தே செயல்படுகின்றன.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக இருந்தாலும், அவரது உதவியாளர் பாண்டியன்தான் பிஜு ஜனதாதள அரசை நடத்துகிறார். பாண்டியன், அமித்ஷா, நரேந்திரமோடி, நவீன் பட்நாயக் ஆகியோர் உங்கள் வளங்களை கொள்ளையடிக்கிறார்கள்.

நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ரூ.9 லட்சம் கோடி கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. நில ஆக்கிரமிப்பு மூலம் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. தோட்ட முறைகேடு மூலம் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் உங்களது பணத்தை திரும்ப வழங்குவோம்.

முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உங்களுக்கு பாண்டியனை வழங்கினால், காங்கிரஸ் உங்களுக்கு என்ன கொடுக்கும் என நான் கூறுகிறேன். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகரமான பணிகளை செய்வோம்.

அதாவது ஏழை குடும்பங்கள் குறித்த பட்டியலை உருவாக்குவோம். அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவரை தேர்வு செய்வோம். அவருக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்குவோம். இது மாதத்துக்கு ரூ.8,500 ஆகும்.

இதைப்போல முதல் வேலை உறுதி திட்டம் கொண்டு வருவோம். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த அனைத்து வேலையில்லாத இளைஞர்களும் பழகுனர் பயிற்சி பெறுவார்கள். உங்கள் முதல் வேலைக்கான உத்தரவாதத்தை ஒரு ஆண்டுக்கு நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். அது பொதுத்துறை, தனியார் துறை, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அலுவலகங்களில் வழங்கப்படும்.

ஒடிசாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3,000, இலவச மின்சாரம், ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். பிரதமர் மோடி வெறும் 22 கோடீஸ்வரர்களுக்காக உழைத்து வருகிறார். ஆனால் நாங்கள் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்குவோம்.

தேவை ஏற்படும்போதெல்லாம் வேளாண் கடன்களை காங்கிரஸ் தள்ளுபடி செய்திருக்கிறது. அதைப்போல மத்தியில் ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்