Paristamil Navigation Paristamil advert login

ரத்னம் - விமர்சனம்

ரத்னம் - விமர்சனம்

27 சித்திரை 2024 சனி 11:50 | பார்வைகள் : 385


தென் தமிழகத்தின் தூத்துக்குடியை மையமாக வைத்தே தனது பல படங்களின் கதைக்களத்தை அமைத்தவர் இயக்குனர் ஹரி. இப்போது அப்படியே வட தமிழகம் பக்கம் வந்து வேலூர், திருத்தணி என ஆந்திரா எல்லைக்கு மாறியிருக்கிறார். தமிழ், தெலுங்கில் படம் வெளியாவதால் இப்படி வசதியாக ஒரு கதைக்களத்தை அமைத்திருக்கலாம்.

ஹரி படங்களில் வழக்கம் போல இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் உண்டு. குறிப்பாக 'அருவா' உண்டு. இந்தப் படத்தில் 'அருவா' உடன் நீளக்கயிற்றையும் சேர்த்து புது ஆயுதமாகக் காட்டியிருக்கிறார். படத்தில் கதையை விடவும் சண்டைக் காட்சிகளுக்கு நிறைய உழைத்திருக்கிறார்கள்.

சமுத்திரக்கனியின் உயிரை ஒரு முறைக் காப்பாற்றி சிறு வயதிலேயே சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கிறார் விஷால். திரும்பி வந்ததும் எம்எல்ஏ ஆக இருக்கும் சமுத்திரக்கனிக்காக சகலமும் செய்யும் அடியாளாகவே மாறிவிடுகிறார். நீட் தேர்வு எழுத வேலூருக்கு வரும் பிரியா பவானியைப் பார்த்ததுமே விஷாலுக்கு இனம் புரியாத பாசம் வருகிறது. அவரைப் பின் தொடர்ந்து சென்ற போது யாரோ சிலர் பிரியா பவானியைக் கொல்ல முயற்சிப்பதைத் தடுக்கிறார். ஆந்திராவில் நில மோசடி செய்யும் முரளி சர்மா குரூப்தான் ஒரு நிலத்தகராறில் பிரியா பவானியைக் கொல்ல முயற்சிப்பதைத் தெரிந்து கொள்கிறார். பிரியா உடன் அவருடைய ஊருக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கிறார். முரளிசர்மாவிடமிருந்து பிரியாவைக் காப்பாற்றத் துடிக்கிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அடியாள் விஷால் என ஆரம்பமான கதை கடைசியில் அவர் யார், அவரது பின்னணி என்ன என்ற சஸ்பென்ஸ் வரை திரைக்கதை நீண்டு கொண்டே போகிறது. வழக்கம் போலவே பரபரப்பான திரைக்கதையுடன் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஹரி.

'சண்டக்கோழி' காலத்திலிருந்தே திமிறிக் கொண்டு நிற்கும் விஷால், இந்தப் படத்திலும் அப்படியே நிற்கிறார். அவருடைய ஆக்ஷன் இமேஜை ஸ்டன்ட் மாஸ்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தியிருக்கிறார்கள். படத்தில் இருக்கும் நான்கைந்து சண்டைக் காட்சிகளுமே அதிரடியாக உள்ளன. தனக்கு ஆதரவளித்த சமுத்திரக்கனிக்காக வாழ்பவர். பிரியா பவானியைப் பார்த்ததும் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துடிப்பவர். வழக்கம் போல தன் நடிப்பில் துடிப்பைக் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் விஷால்.

படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கர், ஆனால், அவர் விஷால் ஜோடி இல்லை. உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரம் பிரியாவுக்கு. தனக்காக விஷால் ஏன் இப்படி துடிக்கிறார் என்ற உண்மை தெரிய வந்ததும் விஷால் மீதான பாசம் பன்மடங்கு அதிகமாகிவிடுகிறது.

படத்தில் அருமையான ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. வேலூர் தொகுதி எம்எல்ஏவாக நடித்திருக்கிறார். விஷாலுக்கு ஒன்று என்றால் முன்னாடி வந்து நிற்பவர். படத்தின் முக்கிய வில்லன் முரளி சர்மா. அவரது தம்பிகளாக ஹரிஷ் பெரடி, முத்துக்குமார். தெலுங்கு டைப் வில்லன்களாகவே வருகிறார்கள்.

யோகிபாபு படம் முழுவதும் வருகிறார். ஏதோ சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், துளசி, மொட்டை ராஜேந்திரன் என மற்ற சில நடிகர்களும் உண்டு. கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வருகிறார் இயக்குனர் கவுதம் மேனன்.

தேவிஸ்ரீபிரசாத் பின்னணி இசையில் அதிரடி காட்டியிருக்கிறார். படத்தில் உள்ள சில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், போகிற வேகத்தில் அவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் சுகுமார் நின்று கொண்டு படமாக்கியிருக்க வாய்ப்பேயில்லை. கேமரா பறந்து கொண்டே இருந்திருக்கும் போல. கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், விக்கி ஆகிய ஸ்டன்ட் மாஸ்டர்கள் பாதி படத்தை இயக்கி விட்டார்கள்.

படத்தின் பல காட்சிகள் தெலுங்கு படம் பார்க்கும் உணர்வையே தருகிறது. இடைவேளைக்குப் பின் திரைக்கதை எங்கெங்கோ, எப்படியோ பயணிக்கிறது. விஷால் யார் என்ற திருப்பத்தை இடைவேளைக்குப் பிறகு சீக்கிரமே சொல்லியிருந்தால் இன்னும் ரசித்திருக்க முடியும். அதை கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்கிறார்கள். சில வசனங்கள் அபத்தமாக இருக்கிறது. இரண்டு மூன்று கிளைமாக்ஸ்கள் வந்து போகிறது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்