'மஞ்சும்மெல் பாய்ஸ்' திரைப்படத்திற்கு இளையராஜாவினால் வந்த சிக்கல்!
23 வைகாசி 2024 வியாழன் 13:08 | பார்வைகள் : 2249
சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் தனது ’குணா’ படத்தின் பாடலை பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜா அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே இசைஞானி இளையராஜா பதிப்புரிமை குறித்த வழக்கில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் பதிப்புரிமை சட்டப்படி பாடல்கள் அனைத்தும் தனக்கே சொந்தம் என்றும் தன்னிடம் அனுமதி இல்லாமல் திரைப்படத்தை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறி வருகிறார்.
சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவில் தான் கம்போஸ் செய்த பாடல் வெளிவந்தது குறித்து அவர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவான ’குணா’ படத்தின் ’கண்மணி அன்போடு காதலன் நான்’ என்ற பாடலை பயன்படுத்தியதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸில் ’பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் நான் தான் என்றும் அதனால் என்னிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றும் இந்த நோட்டீஸ் கண்டவுடன் பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் அல்லது பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பை வழங்க வேண்டும் இல்லை எனில் பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாக கருதி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திநிலையில் இதற்கு ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.