யாழில் இருந்து சென்ற கார் விபத்து - சிறுமி உயிரிழப்பு
23 வைகாசி 2024 வியாழன் 11:09 | பார்வைகள் : 2447
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
காரில், சிறுவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறையை சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் அவர்களது இரு பிள்ளைகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளை , திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் கார் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்தில் கணவன் - மனைவி இருவரும் காயங்களின்றி தப்பித்த நிலையில் , அவர்களது மகளான 06 வயதுடைய நிதர்சன் ஆதித்தியா எனும் சிறுமி உயிரிழந்துள்ளார் அவர்களது மகனான 04 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.