Paristamil Navigation Paristamil advert login

இறால் பிரியாணி

இறால் பிரியாணி

18 சித்திரை 2024 வியாழன் 12:13 | பார்வைகள் : 280


நாம் இன்று இங்கே பார்க்கப்போவது செட்டிநாடு ஸ்டைலில் சுவையான இறால் பிரியாணியை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்று தான்.

தேவையான பொருட்கள் :

இறால் மாரினேட் செய்ய தேவையானவை :

இறால் - 1/2 கிலோ

தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிளகாய் தூள் - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

மற்ற பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - 2

பழுத்த தக்காளி - 1

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கறிமசாலா தூள் - 1 டீஸ்பூன்

பிரியாணி மசாலா - 1/2 டீஸ்பூன்

சோம்பு தூள் - 1 டீஸ்பூன்

கிராம்பு - 3

பட்டை - 1

பிரியாணி இலை - 1

ஏலக்காய் - 3

அன்னாசிப்பூ - 1

எண்ணெய் - தேவைக்கேற்ப

நெய் - தேவைக்கேற்ப

கொத்தமல்லி இலை - கைப்பிடி

புதினா - கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் பாசுமதி அரிசியை இரண்டு, மூன்று முறை நன்றாக அலசி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணிநேரம் வரை ஊறவைத்து கொள்ளவும்.

பின்னர் இறாலை நன்றாக சுத்தம் செய்து ஒரு பௌலில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தயிர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்து அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

பின்னர் அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டின் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள் மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

தக்காளி மென்மையாக வதங்கியவுடன் இறாலைச் சேர்த்து ஒரு முறை கிளறி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.

அடுத்து அதில் 2 கப் அரிசிக்கு மூன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

இது நன்றாக கொதி வந்ததும் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு நன்றாக கலந்து மீண்டும் ஒரு கொதி விடவும்.

பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி அரிசி முக்கால் பதம் வேகும் வரை சமைக்கவும்.

முக்கால் பதம் வெந்ததும் அதை 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி தம்மில் போடவும்.

இப்போது மூடியை திறந்து பார்த்தால் சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி சாப்பிட தயாராக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்