யாழ்ப்பாணத்தில் கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்
18 சித்திரை 2024 வியாழன் 04:39 | பார்வைகள் : 2670
யாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.
நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனை அடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால் , பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.
அந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை , பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து , படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.
படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும் , அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.