கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரியுமா?
17 சித்திரை 2024 புதன் 15:14 | பார்வைகள் : 2305
அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக உடலின் வெப்பநிலை சீரமைப்பு அமைப்பில் குழப்பம் ஏற்படும் பொழுது அது வெப்பம் சம்பந்தப்பட்ட உடல்நல கோளாறுகளை உருவாக்குகின்றது. அது லேசான வலி முதல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் போன்றவற்றை ஏற்படுத்தலாம். போதுமான அளவு நீர்ச்சத்து அல்லது ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்திற்கு ஒருவர் நீண்ட நேரத்திற்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுது இதுபோன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன.
அதிகப்படியான வியர்வை காரணமாக நீர்ச்சத்து இழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை உருவாகி வெப்ப சுருக்குகள் ஏற்படுகிறது. தாங்க முடியாத தசை வலி குறிப்பாக அடி வயிறு, தோள்பட்டை, கால்கள் போன்ற பகுதிகளில் வலி மற்றும் இதனுடன் சேர்ந்து வியர்வை ஆகியவை வெப்ப சருக்குகளுக்கான ஒரு சில அறிகுறிகள்.
போதுமான அளவு திரவங்களை உட்கொள்ளாமல் அதிகப்படியான வெப்ப நிலைக்கு நீண்ட நேரத்திற்கு ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டால் டீ-ஹைட்ரேஷன் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை உண்டாகிறது. அதிக வியர்வை, வலுவிழந்து காணப்படுதல், மயக்கம், தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி, வேகமான இதயத்துடிப்பு போன்றவை இதற்கான அறிகுறிகள்.
நீர்ச்சத்து இழப்பின் விளைவாக மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் தற்காலிகமாக ஒருவர் நினைவிழந்து மயக்கம் அடைகிறார். நீண்ட நேரத்திற்கு நின்றாலோ அல்லது உடலின் நிலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டாலோ இது ஏற்படுகிறது.
உடலின் வெப்பநிலை சீரமைப்பு பொறிமுறை செயலிழந்து காணப்படும் பொழுது வெப்பத்தாக்கு உருவாகிறது. ஆபத்தளிக்க கூடிய வகையில் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது இது ஏற்படுகிறது. இதன்போது அதிக உடல் வெப்பநிலை, சூடான மற்றும் வறண்ட தோல், விரைவான சுவாசம், விரைவான இதயத்துடிப்பு, குழப்பம், வலிப்பு, நினைவிழந்து போதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
வெப்பம் சம்பந்தப்பட்ட உடல்நல கோளாறுகளை அடையாளம் காண்பது எப்படி?
வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியாக வியர்த்தல், வெளிறிய சருமம், விரைவான இதயத்துடிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற உடலின் ஒரு சில அறிகுறிகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
குழப்பம், எரிச்சல் அல்லது வழக்கத்திற்கு மாறான சோர்வு போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை கவனியுங்கள்.ஒருவரின் உடல் வெப்பநிலையை அளவிட தெர்மாமீட்டர் பயன்படுத்தவும். 40℃ வெப்பத்தாக்கு அல்லது வெப்ப களைப்பை உணர்த்துகிறது. வெப்பத்தாக்கு ஏற்படும் பொழுது தசை வலி, வலுவிழந்து காணப்படுதல், மயக்கம், குமட்டல், வாந்தி அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
அடர்ந்த நிற சிறுநீர், சிறுநீர் கழிக்கும் அளவு குறைதல், வறண்ட வாய் மற்றும் தாகம் போன்றவை நீர்ச்சத்து இழப்பிற்கான ஒரு சில அறிகுறிகள்.தசை சோர்வு அல்லது சீரற்ற இதயத்துடிப்பு போன்றவை எலக்ட்ரோலைட் சமநிலையின்மையின் அறிகுறிகள்.
வெப்பம் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான ஒரு சில தீர்வுகள் : வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் கூட நமது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நாம் ஒரு சில விஷயங்களை பின்பற்றலாம்.
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவங்களை பருகுதல். தாகம் ஏற்படவில்லை என்றாலும் கூட குறிப்பிட்ட இடைவெளிக்கு சரியாக தண்ணீர் பருகுங்கள்.
மதுபானங்கள், காபி, டீ போன்றவை நீர்ச்சத்து இழப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை தவிர்க்கவும். முடிந்த வரை நிழலில் இருக்கவும்.
வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது சன் ஸ்கிரீன் பயன்படுத்தவும், தொப்பி அணிந்து கொள்ளவும்.சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருக்கும் பொழுது வெளியில் செல்வதை தவிர்க்கவும்.தளர்வான, குறைவான எடை கொண்ட வெளிர் நிற ஆடைகளை அணியவும்.
அதிகப்படியான வெப்பத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் மேற்கொள்வது அவசியம்.