Paristamil Navigation Paristamil advert login

ரொம்ப மனஅழுத்ததோட இருக்கீங்களா...? இதை படிங்க...!

ரொம்ப மனஅழுத்ததோட இருக்கீங்களா...? இதை படிங்க...!

16 சித்திரை 2024 செவ்வாய் 14:24 | பார்வைகள் : 1610


முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல, சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும், தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.

ஏமாற்றங்களும், பிரிவுகளும், இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்த தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.

மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள், தூங்குவார்கள், சுற்றத்தை விட்டு விலகுவார்கள், நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள், வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினருக்கு மேலோங்கி உள்ள பெரிய பிரச்சனையே மன அழுத்தம் தான். பள்ளி குழந்தைகளுக்கு கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மாறி வரும் பழக்கவழக்கங்கள் தான். மனஅழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகள் இதோ....

மனஅழுத்தம்:

சில வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வது மூலம் மனஅழுத்தத்தை தூண்டும் ஹார்மோன் எண்ணிக்கையை குறைக்கலாம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் நாம் வேலை என்றே ஓடி கொண்டிருக்கிறோம். நம்மை நாமே பார்த்துக்கொள்ள கூட நேரமிருப்பதில்லை.

சிறிதும் ஓய்வின்றி வேலைகள் செய்வதால் கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. வயதிற்கு மீறிய சுமைகளை அவர்கள் மீது சுமத்தும் போது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை. இதனை விரட்ட சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும்.

 தவிர்க்கும் முறை:

* உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். தினமும் காலையில் மூச்சு பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து உடலும் மனமும் லேசாகும்.

* வீட்டிலேயே முடங்கி கிடப்பதை விட்டுவிட்டு சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அனைத்தையும் கவனித்துக் கொண்டு நடக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மனஅழுத்தம் சற்று குறையும்.

* ஓய்வாக இருக்கும் வேளைகளில் உங்களுக்கு பிடித்த பாடலை கேளுங்கள். இது மனதிற்கு ஆறுதல் அளிப்போதோடு மன அழுத்தத்தையும் குறைக்கும்.

* மனஅழுத்தத்தின் போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அப்பொழுது வயிறு குலுங்க சிரிப்பதால் அந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மூளையை தூண்டுவதற்கு உதவும். எனவே வயிறு குலுங்க சிரித்து பழகுங்கள். மனஅழுத்தம் குறையும். உங்களை சிரிக்க வைப்பவர்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்பவர்களிடம் அதிகமாக பழகுங்கள்.

* இனிப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு வருவதால் மனஉளைச்சலை தூண்டும் ஹார்மோன்கள் குறைக்க உதவும் என ஆய்வு கூறுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சாக்லேட் போன்ற இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு வந்தால் மனஅழுத்தம் குறையும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்