Paristamil Navigation Paristamil advert login

வெங்காய சாதம்

வெங்காய சாதம்

13 சித்திரை 2024 சனி 08:34 | பார்வைகள் : 432


குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுப்பதற்கு என்ன சமைக்கலாம் என்று எப்போதுமே குழப்பமாக தான் இருக்கும். ஏனென்றால் காலையில் செய்யப்படும் உணவை குழந்தைகள் மதியம் தான் சாப்பிடுவார்கள். எனவே அவர்களுக்கு அந்த உணவு பிடித்ததாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்வது வழக்கம்.அப்படி குழந்தைகளுக்கு பிடித்தவாறு மதிய உணவிற்கு சுவையான வெங்காய சாதம் எப்படி செய்யலாம் என்று  தெரிந்துகொள்ளுங்கள்

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 1 கப்

கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 4

முழு பூண்டு - 1

புளி தண்ணீர் - கால் கப்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக அலசி தண்ணீர் ஊற்றி ஒன்றிலிருந்து இரண்டு மணிநேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.

பின்னர் பாஸ்மதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து சமைத்து சாதத்தை வடித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் மற்றும் கடலைப்பருப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இவை பொன்னிறமாக வதங்கியவுடன் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

பூண்டு வதங்கியவுடன் பொடிதாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காய தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வதக்கவும்.

மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் புளி தண்ணீர் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கடாயை ஒரு மூடியால் மூடி 4 நிமிடங்கள் வரை சமைக்கவும்.

பின்னர் ஏற்கனவே சமைத்து வைத்துள்ள வெள்ளை சாதத்தை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 2 நிமிடங்களுக்கு வேகவிடவும்.

இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான வெங்காய சாதம் சாப்பிட ரெடி…

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்